மாநிலங்களவை தலைவரால் பதவிநீக்கம் செய்யப்பட்ட சரத் யாதவ், எம்.பி.க்கான ஊதியத்தையும், பிற சலுகைகளையும் பெற முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
எனினும், இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள வரை எம்.பி.க்களுக்கான அரசு இல்லத்தை சரத் யாதவ் பயன்படுத்திக் கொள்ளலாம் என உச்ச நீதிமன்றம் கூறியது.
உச்ச நீதிமன்றத்தின் விடுமுறை கால அமர்வு நீதிபதிகள் ஏ.கே.கோயல், அசோக் பூஷண் ஆகியோர் இதுகுறித்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்தபோது மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சியை கலைத்துவிட்டு, பாஜகவுடன் சேர்ந்து ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதீஷ் குமார் ஆட்சி அமைத்தார்.
அந்த சமயத்தில், பிகாரில் எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணியில் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.க்கள் சரத் யாதவ் மற்றும் அன்வர் அலி ஆகியோர் பங்கேற்றனர்.
இதையடுத்து, கட்சித் தாவல் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்குமாறு ஐக்கிய ஜனதா தளம் கோரிக்கை விடுத்ததன் பேரில் இந்த இருவரையும் எம்.பி. பதவியில் இருந்து மாநிலங்களவை தலைவர் தகுதிநீக்கம் செய்தார்.
இதற்கு எதிராக சரத் யாதவ் தரப்பில் தில்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரபட்டபோது, தகுதிநீக்க நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
எனினும், வழக்கு நிலுவையில் இருக்கும் வரை, எம்.பி.க்கான ஊதியம் மற்றும் சலுகைகளை சரத் யாதவ் பெறலாம் என்றும், அரசு இல்லத்தில் தங்கிக் கொள்ளலாம் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஐக்கிய ஜனதா தளம் எம்.பி.யும், மாநிலங்களை கட்சித் தலைவருமான ராமச்சந்திர பிரசாத் சிங், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதையடுத்து, சரத் யாதவுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில், அந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, மாநிலங்களவைத் தலைவரால் தகுதிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஊதியம் மற்றும் சலுகைகளை சரத் யாதவ் பெற்றுக் கொள்ளலாம் என்று உயர் நீதிமன்றம் எப்படி உத்தரவிட முடியும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, சரத் யாதவ் தரப்பில் ஆஜரான அவரது வழக்குரைஞர், ஊதியம் மற்றும் சலுகையை விட்டுத் தர சரத் யாதவ் தயாராக உள்ளார் என்றும், உயர் நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ள வரை அரசு இல்லத்தில் தங்குவதற்கு அனுமதித்தால் போதுமானது என்றும் தெரிவித்தார்.
இதையடுத்து, நீதிபதிகள் கூறுகையில், ஊதியம் மற்றும் சலுகைகளை வழங்க வகை செய்யும் உயர் நீதிமன்ற உத்தரவை நாங்கள் திருத்தி அமைக்கிறோம். அதே சமயம், வழக்கு முடியும் வரை அரசு இல்லத்தில் சரத் யாதவ் தங்கியிருக்கலாம் என்பதில் நாங்கள் எந்த மாற்றமும் செய்ய விரும்பவில்லை'' என்று தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








