நாகாலாந்து முதல்வரானார் நீபியு ரியோ: முதல் முறையாக ராஜ் பவனுக்கு வெளியே பதவியேற்பு விழா

நாகாலாந்தின் புதிய முதல்வராக தேசியவாத மக்கள் முற்போக்குக் கட்சியின் (என்டிபிபி) தலைவர் நீபியூ ரியோ இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
நாகாலாந்து முதல்வரானார் நீபியு ரியோ: முதல் முறையாக ராஜ் பவனுக்கு வெளியே பதவியேற்பு விழா
Updated on
1 min read


கோஹிமா: நாகாலாந்தின் புதிய முதல்வராக தேசியவாத மக்கள் முற்போக்குக் கட்சியின் (என்டிபிபி) தலைவர் நீபியூ ரியோ இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.

அவருக்கு நாகாலாந்து மாநில ஆளுநர் பீ.பி. ஆச்சார்யா, பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார். நீபியு ரியோவுடன் 11 அமைச்சரவை சகாக்களும் பொறுப்பேற்றுக் கொண்டனர்.

நாகாலாந்தில் முதல் முறையாக ராஜ்பவனுக்கு வெளியே முதல்வர் பதவியேற்பு விழா நடைபெற்றுள்ளது. நீபியு ரியோ, கோஹிமாவில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் பொதுமக்கள் முன்னிலையில் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்.

வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் என்டிபிபி - பாஜக கூட்டணி 30 இடங்களைக் கைப்பற்றியது. என்டிபிபி கட்சி 18 இடங்களிலும், பாஜக 12 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. எனினும், இக்கூட்டணிக்கு பெரும்பான்மைக்குத் தேவையான எண்ணிக்கையை விட ஒரு இடம் குறைவாகவே இருந்தது.

மாநிலத்தில் இதுவரை ஆட்சி புரிந்த முதல்வர் ஜீலியாங் தலைமையிலான தேசிய மக்கள் முன்னணி 26 இடங்களில் வெற்றி பெற்றது. ஒரு இடத்தில் சுயேச்சை வேட்பாளரும் மற்றொரு இடத்தில் ஐக்கிய ஜனதா தள வேட்பாளரும் வெற்றி பெற்றனர்.

இதனிடையே, புதிய அரசை அமைக்க அழைப்பு விடுக்குமாறு நீபியூ ரியோ, ஜீலியாங் ஆகிய இருவருமே ஆளுநர் பி.பி.ஆச்சார்யாவிடம் உரிமை கோரியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து, பெரும்பான்மைக்குத் தேவையான எம்எல்ஏக்களின் கையொப்பத்தை சமர்ப்பிக்குமாறு இருவருக்கும் ஆளுநர் உத்தரவிட்டார். 

அதன்படி, என்டிபிபி கட்சித் தலைவர் நீபியூ ரியோ தனக்கு ஆதரவளிக்கும் தன் கட்சியின் 18 எம்எல்ஏக்கள், பாஜகவின் 12 எம்எல்ஏக்கள், ஒரு சுயேச்சை எம்எல்ஏ, ஐக்கிய ஜனதாதளத்தின் ஒரு எம்எல்ஏ ஆகியோரின் கையொப்பத்தைப் பெற்று ஆளுநரிடம் சமர்ப்பித்தார்.

அதை ஏற்றுக் கொண்ட ஆளுநர், மாநிலத்தின் புதிய முதல்வராக நீபியூ ரியோவை நியமித்தார். வரும் 16ஆம் தேதிக்குள் சட்டப் பேரவையில் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்குமாறு ரியோவை ஆளுநர் கேட்டுக் கொண்டுள்ளார். 

இந்நிலையில், நீபியூ ரியோ இன்று முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருடன் 11 பேர் கொண்ட புதிய அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com