பாஜக பிரமுகர் மீது பாலியல் வன்கொடுமை புகார்: நடவடிக்கை இல்லாததால் பெண் வழக்கறிஞரின் வினோத போராட்டம்
லக்னௌ: பாஜக பிரமுகர் மீதான் பாலியல் வன்கொடுமை புகாரில் நடவடிக்கை எடுக்கப்படாததால் பெண் வழக்கறிஞர் ஒருவர் தனது தலையை மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னௌவைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் ஒருவரை, மூத்த வழக்கறிஞரும், பாஜக பிரமுகருமான சதீஷ் ஷர்மா என்பவர் பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். பெண் வழக்கறிஞரை மூன்று ஆண்டுகளாக மனரீதியாக அவர் துன்புறுத்தி வந்துள்ளார். இதுதொடர்பாக அவர் புகார் அளித்துள்ளார். ஆனால் அவரது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் புகாரில் நடவடிக்கை எடுக்கப்படாததால் அந்தப் பெண் வழக்கறிஞர் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தனது தலையை மொட்டை அடித்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தலையை மொட்டை அடித்துக் கொண்ட பெண் வழக்கறிஞர் கூறியதாவது:
மூத்த வழக்கறிஞரும், பா.ஜ.க பிரமுகருமான சதீஷ் ஷர்மா என்னை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த மூன்று ஆண்டுகளாக என்னை மனரீதியாகவும் துன்புறுத்தி வருகிறார். மேலும், என்னை ஆபாசமாக அவர் வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி வந்தார்.
அவர் மிகப்பெரிய தலைவராக இருப்பதால் அவர் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்தி எனது குடும்பத்தினரை மிரட்டுகிறார்.நான் ஒரு தலித்தாக இருப்பதனால்தான் இந்தப் பிரச்சினைகளை எல்லாம் சந்திக்க வேண்டியுள்ளது.
காசிப்பூர் காவல்நிலையத்தில் சதீஷ் ஷர்மா மீது புகார் தெரிவித்துள்ளேன். ஆனால் காவல்துறையினர் என் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல், என்னிடம் ஏதாவது காரணங்கள் கூறி சமாளித்து வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.