சிறு பிள்ளை மாதிரி விளையாடாதீர்கள்: மோடியை கிண்டல் செய்த ராகுல் 

சிறு பிள்ளை மாதிரி விளையாடாதீர்கள் என்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு தொடர்பாக பிரதமர் மோடியை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
சிறு பிள்ளை மாதிரி விளையாடாதீர்கள்: மோடியை கிண்டல் செய்த ராகுல் 

புதுதில்லி: சிறு பிள்ளை மாதிரி விளையாடாதீர்கள் என்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு தொடர்பாக பிரதமர் மோடியை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

கர்நாடக தேர்தலை முன்னிட்டு தினந்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கும் முறை 19 நாட்களுக்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. தேர்தல் முடிந்து மே 14ம் தேதி முதல் மீண்டும் அந்த முறை நடைமுறைக்கு வந்து கடந்த 16 நாட்களாக பெட்ரோல், டீசல் விலைகள் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்தது. இதனால் பொது மக்களும் கடும் அதிருப்தியில் இருந்தனர்.

அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் இன்று காலை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இணைய தளத்தில், பெட்ரோல் விலை 60 காசும், டீசல் விலை 56 காசும் குறைக்கப்படுவதாகக் கூறப்பட்டிருந்தது. இது தலைப்புச் செய்தியானது.

ஆனால், பெட்ரோல், டீசல் விலைகளைக் கணக்கிடுவதில் தவறு நேரிட்டுவிட்டதாகவும், முந்தைய விலையை மாற்றி, பெட்ரோல், டீசல்களின் திருத்தப்பட்ட விலைகள் அறிவிக்கப்படுவதாகவும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அறிவித்துள்ளது.

அதன்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு ஒரு காசு மட்டுமே குறைக்கப்பட்டுள்ளது. உடனடியாக இந்த விலை நிலவரம் பெட்ரோல் பங்குகளில் அமலுக்கும் வந்துவிட்டது.

இந்த ஒரு காசு குறைப்பை செய்து தான் என்ன? செய்யாமல் இருந்துதான் என்ன ஆகப்போகிறது என்று பொதுமக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

இந்நிலையில் சிறு பிள்ளை மாதிரி விளையாடாதீர்கள் என்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைப்பு தொடர்பாக பிரதமர் மோடியை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:

அன்புள்ள பிரதமரே!..பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஒரு பைசா குறைத்துள்ளீர்கள். ஒரு பைசா !?? இதை ஒரு குறும்பு என்று நீங்கள் நினைத்தால், இது மிகவும் சிறுபிள்ளைத்தனமாகவும் மோசமாகவும் உள்ளது.

குறிப்பு: கடந்த வாரம் நான் உங்களுக்கு விடுத்த 'எரிபொருள் சவாலுக்கு' இது சரியான பதில் இல்லை.

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார்.

முன்னதாக கடந்த வாரம் மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோர், இந்தியர்களின் உடற்தகுதி மந்திரத்தை செயல்படுத்தி அதனை விடியோ மூலம் சமூகவலைதளங்களில் பதிவிடுமாறு கோரிக்கை வைத்திருந்தார்.

இதையடுத்து, அவர் உடற்தகுதி சவாலில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, பேட்மிண்டன் விராங்கனை சாய்னா நேவால் மற்றும் பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் ஆகியோரை பங்கேற்க கடந்த வாரம் செவ்வாய்கிழமை பரிந்துரை செய்தார். 

அதையேற்ற கோலி தான் உடற்பயிற்சி செய்யும் விடியோவினை காட்சிப்படுத்தி, மறுநாள் புதன்கிழமை ட்விட்டரில் பதிவிட்டார். அந்த பதிவில் பிரதமர் மோடி, கிரிக்கெட் வீரர் தோனி மற்றும் மனைவி அனுஷ்கா ஆகியோருக்கு உடற்தகுதி சவாலை விடுப்பதாகவும் கோலி குறிப்பிட்டிருந்தார். 

இந்த சவாலை ஏற்றுக்கொள்வதாக மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

சவால் ஏற்றுக்கொள்ளப்பட்டது, விராட்! உடற்தகுதி சவாலுக்கான விடியோவை நான் விரைவில் பகிர்கிறேன்"

இவ்வாறு அவர் தெரிவித்திருந்தார். அதற்கு உடனடி எதிர்வினையாக விராட் கோலி விடுத்த உடல்தகுதி சவாலை மட்டும் அல்ல; எனது சவாலையும் ஏற்று எரிபொருள் விலையை குறையுங்கள் என்று பிரதமர் மோடிக்கு எதிராக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் சவால் விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com