சபரிமலை ஐயப்பன் கோயில் நடை பலத்த பாதுகாப்புக்கு இடையே திங்கள்கிழமை மாலை திறக்கப்பட்டது.
சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பு வெளியிட்டது. இந்த தீர்ப்பைத் தொடர்ந்து, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி திறக்கப்பட்டபோது, கோயிலுக்கு செல்வதற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெண்கள் வந்தனர். அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை கேரளத்தை ஆளும் இடதுசாரி கூட்டணி அரசு செய்து தந்தது. எனினும், பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து, ஐயப்ப பக்தர்கள் கடந்த மாதம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, சபரிமலையில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதை கருத்தில் கொண்டு சபரிமலையில் முன்னெச்சரிக்கையாக 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அதேபோல், ஐயப்ப பக்தர்களின் தீவிர எதிர்ப்பின் காரணமாக, சபரிமலை வந்த பெண்கள் ஐயப்பன் கோயிலுக்கு செல்லாமல் பாதியில் திரும்பிச் சென்றனர்.
பெண்களுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டது தொடர்பாக 3,731 பேரை கேரள போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 545 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன்பின்னர் சபரிமலை ஐயப்பன் கோயில் நடை கடந்த மாதம் 22ஆம் தேதி சாத்தப்பட்டது.
இந்நிலையில், 3 வாரங்களுக்குப் பிறகு, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சிறப்பு பூஜைக்காக திங்கள்கிழமை மாலை மீண்டும் திறக்கப்பட்டது. கோயில் நடையை தலைமை தந்திரி கண்டரரு ராஜீவரு, மேல்சாந்தி உன்னிகிருஷ்ணன் நம்பூதிரி ஆகியோர் கூட்டாக மாலை 5 மணிக்கு திறந்தனர். இதையடுத்து சபரிமலையில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையாக ஐயப்பனை வழிபடத் தொடங்கினர். பாஜக மூத்த தலைவர்கள், ஐயப்ப தர்ம சேனை தலைவர் ராகுல் ஈஸ்வர் உள்ளிட்டோர் சன்னிதானத்துக்கு வந்திருந்தனர்.
சபரிமலை கோயிலில் சிறப்பு பூஜைகள் எதுவும் திங்கள்கிழமை நடக்கவில்லை. கோயில் நடை இரவு 10 மணியளவில் சாத்தப்பட்டது. அதன்பிறகு கோயில் நடை செவ்வாய்க்கிழமை மீண்டும் திறக்கப்படுகிறது. திருவாங்கூர் சமஸ்தானத்தின் கடைசி மன்னர் பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில், கோயிலில் ஸ்ரீ சித்திரை ஆட்ட திருநாள் கொண்டாடப்படவுள்ளது.
சபரிமலையில் கடந்த மாதம் தொடர் போராட்டங்கள் நடந்தது போல மீண்டும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில், சபரிமலையில் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சபரிமலை ஐயப்பன் கோயில் செல்லும் வழிநெடுகிலும் 2,300 போலீஸாரும், 20 குழுக்களை கொண்ட கமாண்டோ படை வீரர்களும் நிறுத்தப்பட்டிருந்தனர். 100 பெண் போலீஸாரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 50 அல்லது அதை விட கூடுதல் வயதுடைய பெண் போலீஸார் சன்னிதானத்தில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். முக்கிய இடங்களில் சிசிடிவி காமராக்களை பொருத்தி, போலீஸார் கண்காணித்து வந்தனர். செல்லிடப்பேசி செயல்பாட்டை முடக்கும் ஜாமர் கருவிகளும் பொருத்தப்பட்டிருந்தன. பல இடங்களில் பக்தர்களை போலீஸார் தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.
நிலக்கல் முகாமில் இருந்து பம்பை நோக்கி செல்ல செய்தியாளர்களுக்கு காலையில் அனுமதி தரப்படவில்லை. அதன்பிறகு அனுமதி தரப்பட்டது.
பம்பை வந்த 30 வயது பெண்: சபரிமலையில் தரிசனம் செய்யும் திட்டத்துடன், ஆலப்புழையை சேர்ந்த அஞ்சு (30) என்ற பெண், தனது கணவர், 2 குழந்தைகளுடன் பம்பைக்கு திங்கள்கிழமை வந்தார். தமக்கு உரிய பாதுகாப்பு அளிக்கக் கோரி, கேரள காவல்துறையை அவர் அணுகியிருப்பதாக முதலில் செய்திகள் வெளியாகின. ஆனால் பின்னர், சபரிமலை செல்ல தமக்கு விருப்பமில்லை, கணவரின் வற்புறுத்தலின்பேரிலேயே நான் வந்திருக்கிறேன் என்று அவர் பேட்டியளித்தார். இதையடுத்து காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் அஞ்சு தங்கவைக்கப்பட்டார். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த அஞ்சுவின் உறவினர்களை காவல்துறையினர் அழைத்துள்ளனர்.
144 தடை அமல்: சபரிமலை ஐயப்பன் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு காவல்துறையினரால் அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த தடை உத்தரவு செவ்வாய்க்கிழமை இரவு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை மூடப்படும் வரை அமலில் இருக்கும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
கேரள அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு: இதனிடையே, சபரிமலை ஐயப்பன் கோயிலின் அன்றாட விவகாரத்தில் கேரள அரசு தலையிடக் கூடாது என உத்தரவிடக்கோரி தொடுக்கப்பட்ட மனு மீது கேரள உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை விசாரணை நடத்தியது. அப்போது சபரிமலை ஐயப்பன் கோயிலின் அன்றாட விவகாரத்தில் தலையிட கேரள அரசுக்கு உரிமை கிடையாது என்றும், கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பது மட்டுமே கேரள அரசின் பணி என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதேபோல், சபரிமலை தொடர்பான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்துகிறோம் என்ற பெயரில், ஐயப்பன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு காவல்துறையினர் நெருக்கடி அளிக்கக் கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சபரிமலை வரும் ஐயப்ப பக்தர்களை தீவிரமாக சோதனையிடும் போலீஸார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









