மத்திய அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் விவரங்களை அளிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு 

மத்திய அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் விவரங்களை அளிக்க பிரதமர் அலுவலகம் மறுப்பு 

தகவல்  அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் விவரங்களை அளிக்க, பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது 
Published on

புது தில்லி: தகவல்  அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட மத்திய அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் விவரங்களை அளிக்க, பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது 

அடிப்படையில் இந்திய வனத்துறை சேவை (ஐ.எப்.எஸ்)  அதிகாரியான சஞ்சீவ் சதுர்வேதி கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை மத்திய ஊழல் தடுப்பு ஆணையத்தில் பணியாற்றியுள்ளார். ஓய்வுக்கு பிறகு அவர் தகவலறியும் உரிமைச் சட்ட ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறார். 

இவர் சமீபத்தில் மத்திய அமைச்சர்கள் மீது பெறப்பட்ட ஊழல் புகார்கள் குறித்த விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பிரதமர் அலுவலகத்திடம் கேட்டிருந்தார். ஆனால், பிரதமர் அலுவலகம் அந்தத் தகவலை அளிக்க மறுத்து பதில் அனுப்பியது.

இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் சதுர்வேதிக்கு அளித்த பதிலில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் பல்வேறு துறைகளின் மத்திய அமைச்சர்களுக்கு எதிராகவும், துறை சார் உயர் அதிகாரிகளுக்கு எதிராகவும் ஏராளமான புகார்கள் பிரதமர் அலுவலகத்துக்கு வருகின்றன. ஆனால் இந்தப் புகார்கள் எல்லாம் பெரும்பாலும் முகவரி இல்லாத, ஆதாரமில்லாத புகார்களாகும். 

வந்து சேரும் இத்தகைய இந்தப் புகார்கள் அனைத்தும் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு, குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்களின் தன்மையைப் பார்த்தும், அதற்குரிய ஆதாரங்களின் அடிப்படையில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அந்தப் புகார்கள் மீது தேவையான அளவு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

மேலும், இந்தப் புகார் அமைச்சர்கள், அதிகாரிகள் மீது தனிப்பட்ட ரீதியிலும் ஊழல் சார்ந்தும் கலந்து வருகின்றன. ஆனால், மனுதாரர் தனது மனுவில் அமைச்சர்கள் மீதான ஊழல் தொடர்பான புகார்கள் குறித்த விவரங்களை மட்டுமே கேட்டுள்ளார். இவ்வாறு ஒவ்வொரு புகாரையும் கண்டுபிடித்து, ஆய்வு செய்து ஊழல் குறித்த புகார்களை மட்டும் பிரித்தெடுப்பது என்பது தனிப்பட்ட நபர் சார்ந்த பணியாக மாறிவிடும். 

இத்தகைய பணிகள் அரசு அலுவலகத்தின் வழக்கமான பணிகளில் இருந்து திசைமாற்றிவிடும் என்பதால், மனுதாரர் கேட்டுள்ள தகவல்களை வழங்க இயலாது.

இவ்வாறு பிரதமர் அலுவலகம் அளித்துள்ள விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com