/

ப.சிதம்பரம் தலைமறைவு? சிபிஐ அதிகாரிகள் மீண்டும் வருகை

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயை சந்திப்பதற்காக, ப.சிதம்பரமும், கபில் சிபலும் முயன்றனர். ஆனால், அந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை.

News image
Updated On :31 ஜனவரி 2024, 9:52 am

DIN

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் வழங்க தில்லி உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்துவிட்டது.

மேலும், இந்த முறைகேட்டில் முக்கிய சதிகாரராக ப.சிதம்பரம் செயல்பட்டிருப்பது, வெளிப்படையாக தெரியவருகிறது; அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் ப.சிதம்பரத்தைக் கைது செய்வதற்கு, சிபிஐ, அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகளுக்கு இதுவரை இருந்து வந்த தடை நீங்கியுள்ளது.

இதையடுத்து ப.சிதம்பரத்தின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவரை கைது செய்வதற்காக தில்லியின் ஜோர்பாக் பகுதியிலுள்ள அவரது வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் சென்றனர். அப்போது, அவர் வீட்டில் இல்லை. இதனை உறுதி செய்துகொண்ட அதிகாரிகள், மீண்டும் சிபிஐ அலுவலகத்துக்கு சென்று, அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டனர்.

பின்னர், அவரது வீட்டுக்கு மீண்டும் வந்த அதிகாரிகள், சிபிஐ துணை கண்காணிப்பாளர் ஆர்.பார்த்தசாரதி முன்பாக 2 மணி நேரத்தில் ப.சிதம்பரம் ஆஜராக வேண்டும் என்ற அறிவுறுத்தல் அடங்கிய நோட்டீஸை ஒட்டிவிட்டு சென்றனர். இதே நோட்டீஸ், ப.சிதம்பரத்தின் மின்னஞ்சலுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயை சந்திப்பதற்காக, ப.சிதம்பரமும், கபில் சிபலும் முயன்றனர். ஆனால், அந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. அப்போது முதல் ப.சிதம்பரம் இருக்கும் இடம் தொடர்பான எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதனால் அவர் தலைமறைவானதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், தில்லியில் உள்ள ப.சிதம்பரம் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை காலை 8 மணியளவில் மீண்டும் வந்தடைந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.