நீதிமன்றத்தில் கொந்தளித்த சுப்பிரமணியன் சுவாமி.. எதற்காக தெரியுமா? 

ஆங்கிலத்தில் பேசுங்கள்; நீதிமன்றத்தின் மொழி ஆங்கிலமே” என்று கூறினார். உடனே குறுக்கிட்ட நீதிபதி சமர் விஷால், "இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டும்
நீதிமன்றத்தில் கொந்தளித்த சுப்பிரமணியன் சுவாமி.. எதற்காக தெரியுமா? 
Updated on
2 min read


புதுதில்லி: நேஷனல் ஹெரால்ட் வழக்கு விசாரணையில் வழக்குரைஞர் இந்தியில் கேள்வி எழுப்ப, ஆட்சேபம் தெரித்த சுப்பிரமணியன் சுவாமி, “நான் ஒரு தமிழன் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஆங்கிலத்தில் பேசுங்கள்” என்று கொந்தளித்தார். 

முன்னாள் பிரதமர் ஜவாஹர்லால் நேருவால், கடந்த 1938-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நேஷனல் ஹெரால்டு ஆங்கிலப் பத்திரிகையை, "அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' நிறுவனம் நடத்தி வந்தது. நிர்வாகச் சீர்கேடு, விற்பனைச் சரிவு உள்ளிட்ட காரணங்களால் கடந்த 2008-ஆம் ஆண்டு இந்தப் பத்திரிகை நிறுத்தப்பட்டது.

இந்தப் பத்திரிகையை மேம்படுத்த ரூ.90.25 கோடி அளவுக்கு காங்கிரஸ் கட்சி வட்டியில்லா கடன் அளித்ததைக் காரணம் காட்டி, "அசோசியேட்டட் ஜர்னல்ஸ்' நிறுவனத்தை ராகுல் காந்தி, சோனியா காந்தி உள்ளிட்டோர் பங்குதாரர்களாக இருக்கும் "யங் இந்தியா' நிறுவனம் கையகப்படுத்தியது.

இதன் மூலம் அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தின் ரூ. 2,000 கோடி மதிப்புள்ள சொத்துகளை "யங் இந்தியா' நிறுவனம் அபகரித்துவிட்டதாகவும், 2011, 2012-ஆம் ஆண்டுகளில் நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தில் தங்களுக்கு ரூ.68 லட்சம் வரை வருமானம் வந்திருந்ததாக கணக்கு காட்டி இருந்தனர். ஆனால் மறு ஆய்வு செய்ததில் 2011-ஆம் ஆண்டு ரூ.155.4 கோடியும், 2012- ஆம் ஆண்டில் ரூ.155 கோடியும் வருமானம் வந்ததாகவும், வருமானத்தை குறைத்து காட்டி தாய், மகன் மற்றும் பிறர் நிதி மோசடி மற்றும் முறைகேடு செய்து சதி செய்துள்ளதாக குற்றம்சாட்டி, 2012 ஆம் ஆண்டு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தில்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.

இந்த வழக்கில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மோதிலால் வோரா, ஆஸ்கர் பெர்ணான்டஸ், சுமன் துபே, சாம் பிட்ரோடா ஆகியோர் மீதும் யங் இந்தியா நிறுவனம் மீதும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால், அவர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து வருகின்றனர்.

இந்த வழக்கு சமீமத்தில் பாட்டியாலா மாளிகையில் இருந்து புதியதாக கட்டப்பட்ட ரூஸ் அவென்யூ நிதிமன்ற வளாகத்தில் நீதிபதி சமர் விஷால் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, சுப்பிரமணியன் சுவாமியை, சோனியா மற்றும் ராகுல் காந்தி தரப்பு வழக்குரைஞர் ஆர்.எஸ் சீமா குறுக்கு விசாரணை செய்தார். நீதிபதி சமர் விஷால் முன்னிலையில், வழக்கு தொடர்பாக பல கேள்விகளை சீமா, சுப்பிரமணியன் சுவாமியிடம் எழுப்பினார்.

வழக்கு விசாரணையின் போது சீமா, இந்தியில் பேசினார். இதற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்த சுப்பிரமணியன் சுவாமி, “ஆங்கிலத்தில் பேசுங்கள்; நீதிமன்றத்தின் மொழி ஆங்கிலமே” என்று கூறினார். உடனே குறுக்கிட்ட நீதிபதி சமர் விஷால், "இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டும் நீதிமன்றத்தின் மொழிகள். இந்தி தேசிய மொழி" என்று கூறினார்.

இதனை அடுத்து சில நிமிடங்களில் மீண்டும் சுப்பிரமணியன் சுவாமியிடம் சீமா இந்தியில் கேள்வி எழுப்பினார். மீண்டும் ஆட்சேபம் தெரிவித்த சுவாமி, "தயவுசெய்து ஆங்கிலத்தில் பேசுங்கள். நான் ஒரு தமிழன் என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். ஆங்கிலம் நீதிமன்றத்தின் மொழி"  என்றார்.

இதனை அடுத்து, சீமா ஆங்கிலத்தில் கேள்விகளை எழுப்பினார். இந்த நிகழ்வுகளால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தி தேசிய மொழியா?
இந்தி தேசிய மொழி அல்ல, அலுவல் மொழி மட்டுமே என்று குஜராத் நீதிமன்றம் ஜனவரி 2010-ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்தது. மத்திய அரசு 2009-ஆம் ஆண்டு வெளியிட்ட ஒரு பதிலில், இந்தியாவுக் என தேசிய மொழியென்று எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com