
தில்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.
தில்லி ஜான்சி ராணி வணிகப் பகுதியில் அமைந்துள்ள அனாஜ் மண்டி எனும் தொழிற்சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். இந்த தீ விபத்தில் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருகின்றன.
குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட பல தலைவர்கள் விபத்து குறித்து இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, தில்லி கோர விபத்தில் பலியானவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகக் கூறினார்.
மேலும், 'தில்லி தீ விபத்து செய்தி என்னை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. படுகாயமடைந்தவர்கள் அனைவரும் அதிகாரிகளால் காப்பாற்றப்படுவார்கள். காயமடைந்தவர்களுக்கு விரைவான சிகிச்சை அளிக்கப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் அனைத்து உதவிகளையும் வழங்குமாறு மத்திய அரசு மற்றும் தில்லி அரசை கேட்டுக்கொள்கிறேன். அதேபோன்று, மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் காங்கிரஸ் கட்சியினர் உதவ வேண்டும்' என்று கூறியுள்ளார்.
தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், எம்.பியுமான ராகுல் காந்தி, 'தில்லி தீ விபத்தினால் பலர் மரணமடைந்தது குறித்த செய்தி கேட்டு கவலையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் மீண்டு வர பிரார்த்திக்கிறேன்' என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.