அரசியலில் இணைய அவசரம் காட்டவில்லை என ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தியின் மருமகனான ராபர்ட் வதேரா தெரிவித்துள்ளார்.
தன் மீதான வழக்கு விசாரணைகள் அனைத்தும் முடிவடைந்தவுடன், மக்கள் சேவையில் மிகப் பெரிய அளவில் பங்காற்ற இருப்பதாக ராபர்ட் வதேரா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தார். இதைத் தொடர்ந்து, அவர் விரைவில் அரசியலில் களமிறங்கலாம் என்று யூகங்கள் எழுந்தன.
இந்நிலையில், அவரது சொந்த ஊரான உத்தரப் பிரதேசத்தின் முராதாபாத் மாவட்டத்தில், ராபர்ட் வதேரா தேர்தல் வேட்பாளராகக் களமிறங்கினால் வரவேற்போம் என்று அவரது ஆதரவாளர்கள் சார்பில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ராபர்ட் வதேரா பதிலளிக்கையில், யூகங்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை. அதே வேளையில், அரசியலில் ஈடுபடுவதற்கு எந்த அவசரமும் காட்டவில்லை.
அரசியலில் ஈடுபடுவதற்கு முன் மக்கள் மத்தியில் நம்பிக்கை பெற வேண்டும். மக்களுக்காக நல்லது செய்தால் மட்டுமே அவர்கள் என்னை ஏற்றுக்கொள்வார்கள் என்றார்.
ராபர்ட் வதேராவின் மனைவியான பிரியங்கா வதேரா உத்தரப் பிரதேச மாநிலத்தின் கிழக்கு பகுதியின் காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









