/

புல்வாமா தாக்குதல் பின்னணியில் சதி?: விசாரணை கோரிய மனு நிராகரிப்பு

புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் பெரிய சதி இருக்க வாய்ப்புள்ளது; இதுதொடர்பாக விரிவாக விசாரணை நடத்த மத்திய அரசுக்கு

Updated On :26 பிப்ரவரி 2019, 1:31 am IST


புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலின் பின்னணியில் பெரிய சதி இருக்க வாய்ப்புள்ளது; இதுதொடர்பாக விரிவாக விசாரணை நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை, உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்துவிட்டது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ஆம் தேதி சிஆர்பிஎஃப் படையினர் பயணித்த வாகனத்தின் மீது வெடிபொருள் நிரப்பிய காரை மோதச் செய்து, தற்கொலைப் படை பயங்கரவாதி தாக்குதல் நிகழ்த்தினார். 
இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர். பாகிஸ்தானிலிருந்து செயல்படும் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பு, இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றது.
அண்மைக் காலங்களில் பாதுகாப்புப் படையினர் மீது நடத்தப்பட்ட மிக மோசமான தாக்குதலாக இச்சம்பவம் பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இத்தாக்குதலின் பின்னணியில் பெரிய சதி இருக்க வாய்ப்புள்ளதாக கூறி, உச்சநீதிமன்றத்தில் வினீத் தாண்டா என்ற வழக்குரைஞர் பொது நல மனு தாக்கல் செய்தார். 
அதில், புல்வாமா தாக்குதலுக்கு சுமார் 370 கிலோ எடையுள்ள சக்திவாய்ந்த ஆர்டிஎக்ஸ் வெடிமருந்து பயன்படுத்தப்பட்டுள்ளது. 
இத்தாக்குதலில் உள்ளூர்வாசிகளின் தொடர்பு குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும். இதற்காக ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுவை அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கன்னா ஆகியோர் அடங்கிய அமர்வு திங்கள்கிழமை நிராகரித்துவிட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.