ஈயத்துடன் கூடிய மேகி நூடுல்ஸை நாம் ஏன் சாப்பிட வேண்டும்? கேட்டது யார் தெரியுமா?

ஈயத்துடன் கூடிய மேகி நூடுல்ஸை நாம் ஏன் சாப்பிட வேண்டும்? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஈயத்துடன் கூடிய மேகி நூடுல்ஸை நாம் ஏன் சாப்பிட வேண்டும்? கேட்டது யார் தெரியுமா?
Published on
Updated on
2 min read


புது தில்லி: ஈயத்துடன் கூடிய மேகி நூடுல்ஸை நாம் ஏன் சாப்பிட வேண்டும்? என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேகி நூடுல்ஸ் தொடர்பான வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, குறிப்பிட்ட அளவில்தான் மேகி நூடுல்ஸில் ஈயம் இருப்பதாக நெஸ்ட்லே தெரிவித்த வாதத்துக்கு, நீதிபதி இந்த கேள்வியை எழுப்பினார்.

நெஸ்லே நிறுவனத்திடம் ரூ.640 கோடி அபராதம் கேட்டு தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை குறித்து உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ஆய்வு செய்தது. 


நியாயத்துக்கு புறம்பான வர்த்தக கொள்கைகள், பொய்யான, தவறான தகவல்களுடன் விளம்பரப்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டின் கீழ் இந்த வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.

நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகி நூடுல்ஸ் உணவுப் பொருளில் மோனோசோடியம் குளுட்டாமேட் என்ற ரசாயனம் அளவுக்கு அதிகமாக இடம்பெற்றுள்ளதாகப் புகார் எழுந்தது. அதுதொடர்பாக இந்திய உணவுப் பாதுகாப்பு, தர நிர்ணய ஆணையம் நடத்திய ஆய்வில் மேகி நூடுல்ஸ் சாப்பிடுவதற்கு உகந்தது அல்ல என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, சந்தையில் விற்பனைக்கு இருந்த அனைத்து மேகி நூடுல்ஸ் பொட்டலங்களையும் நெஸ்லே நிறுவனம் திரும்பப் பெற்றது. இந்நிலையில், நியாயத்துக்கு புறம்பான வர்த்தகக் கொள்கைகள் மற்றும் பொய்யான விளம்பர வாசகங்களைப் பயன்படுத்தி இந்திய வாடிக்கையாளர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்திவிட்டதாக நெஸ்லே நிறுவனத்தின் மீது மத்திய அரசு குற்றம்சாட்டியது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் உள்ள 12-1-டி பிரிவின்படி, தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தில் மத்திய அரசு வழக்கு தொடுத்தது.


மேகி நூடுல்ஸ் உடல்நலனுக்கு நல்லது என்று நுகர்வோருக்கு பொய்யான வாக்குறுதியை நெஸ்லே நிறுவனம் வழங்கியதாகவும் அந்த ஆணையத்தில் மத்திய அரசு தெரிவித்தது.

இதுதொடர்பான விசாரணைக்கு தடை கோரி உச்சநீதிமன்றத்தில் நெஸ்லே நிறுவனம் முறையீடு செய்தது. அந்த மனு, உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நெஸ்ட்லே நிறுவனத்தின் சார்பில் உச்சநீதிமன்ற மூத்த வழக்குரைஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி வாதாடினார்.

மேகி நூடுல்ஸ் குறித்து, உச்சநீதிமன்ற உத்தரவின்படி மைசூரில் உள்ள மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம் மேற்கொண்ட ஆய்வின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். மேகி நூடுல்ஸில் ஈயத்தின் அளவு அனுமதிக்கப்பட்ட அளவில்தான் உள்ளது என்றார் அவர்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ஈயத்துடன் கூடிய மேகி நூடுல்ஸை நாம் ஏன் சாப்பிட வேண்டும்? என கேள்வி எழுப்பினர். அதற்கு, பிற உணவுப் பொருள்களிலும் ஈயம் உள்ளது. அதேபோன்றுதான் மேகி நூடுல்ஸிலும் அளவோடு இருக்கிறது. குறிப்பாக, மோனோசோடியம் குளுட்டாமேட் ரசாயனம் மேகியில் இல்லை என்பது ஆய்வக முடிவில் தெரியவந்திருக்கிறது என்று சிங்வி பதில் அளித்தார்.

பின்னர், மைசூர் ஆய்வக அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு தேசிய நுகர்வோர் ஆணையம் விசாரணையை முன்னெடுக்கும் என்றும், அந்த ஆணையத்தின் விசாரணை வரம்பில் உச்சநீதிமன்றம் இப்போது தலையிடுவது சரியாக இருக்காது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

நெஸ்லே வரவேற்பு: நெஸ்லே நிறுவனத்திடம் அபராதம் கோரும் வழக்கில் தேசிய நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையம் விசாரணை நடத்தி இறுதி முடிவு எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியிருப்பதற்கு அந்த நிறுவனம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

யம் மற்றும் பிற மூலப் பொருள்களுக்கு அனுமதியளிக்கப்பட்ட அளவீடுகளையே மேகி நூடுல்ஸ் கொண்டிருப்பது ஆய்வக முடிவுகளில் தெரியவந்திருப்பதாக நெஸ்லே கூறியுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com