கர்நாடகத்தில் காங்கிரஸ்- ம.ஜ.த. கூட்டணி அரசுக்கு எந்தவிதமான ஆபத்தும் இல்லை என்று துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் தெரிவித்தார்.
பெங்களூரில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர ஹோட்டலில் துணை முதல்வர் ஜி.பரமேஸ்வர் சார்பில், அமைச்சர்கள், காங்கிரஸ் மூத்தத் தலைவர்களுக்கு சிற்றுண்டி விருந்து திங்கள்கிழமை அளிக்கப்பட்டது.
விருந்தில் முன்னாள் முதல்வர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ், அமைச்சர்கள் டி.கே.சிவக்குமார், ஜமீர் அகமது கான், வெங்கட்ரமணா, சிவசங்கர் ரெட்டி, சிவானந்த பாட்டீல், ஜெயமாலா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஜி.பரமேஸ்வர் செய்தியாளர்களிடம் கூறியது:-
கர்நாடகத்தில் காங்கிரஸ்- ம.ஜ.த. கூட்டணி அரசு சிறப்பான முறையில் ஆட்சி செய்து வருகிறது. பிப்ரவரி முதல் வாரத்தில் நிதிநிலை அறிக்கையைத் தாக்க செய்ய முதல்வர் குமாரசாமி திட்டமிட்டுள்ளார்.
எனவே துறை வாரியாக விவாதிப்பதற்காக காங்கிரஸ் அமைச்சர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தேர்தல் நேரத்தில் காங்கிரஸ், மஜத உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ள வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளோம்.
காங்கிரஸ் ஆட்சியில் சித்தராமையா தாக்கல் செய்த நிதி நிலை அறிக்கையில் உள்ள வளர்ச்சித் திட்டப் பணிகளையும் நிறைவேற்ற ஆலோசனை நடத்தினோம்.பாஜகவினர் ஆபரேஷன் தாமரை திட்டத்தின் மூலம் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் திட்டம் ஒருபோதும் பலிக்காது. ஆட்சிக்கு ஆபத்து உள்ளது போன்ற சூழலை உருவாக்க, பாஜகவினர் தொடர்ந்து முயன்று வருகின்றனர்.
இருந்தாலும், கூட்டணி அரசுக்கு எந்தவிதமான ஆபத்துமில்லை. ஒரு சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் தொடர்புகள் கிடைக்கவில்லை என்பது உண்மைதான். அதற்காக அவர்கள் பாஜகவில் இணைய முயற்சி மேற்கொண்டுள்ளனர் என்று அர்த்தம் ஆகாது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மீது நம்பிக்கை உள்ளதால், ஆட்சி கவிழும் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் பரமேஸ்வர்.
பேட்டியின்போது அமைச்சர்கள் ஜமீர் அகமது கான், வெங்கட்ரமணா, காங்கிரஸ் தொழிலாளர் பிரிவுத் தலைவர் எஸ்.எஸ்.பிரகாசம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ஆட்சியை காப்பாற்ற ம.ஜ.த., காங்கிரஸ் தீவிரம்
கர்நாடகத்தில் ம.ஜ.த. - காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்க கடைசிக்கட்ட முயற்சியில் பாஜக ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிவருகிறது. இதை முறியடித்து ஆட்சியை தக்கவைக்க ம.ஜ.த., காங்கிரஸ் கட்சிகள் தீவிரம் காட்டிவருகின்றன.
224 உறுப்பினர்கள் கொண்ட கர்நாடக சட்டப் பேரவையில் ஆட்சி அமைப்பதற்கு 113 உறுப்பினர்கள் தேவைப்படுகிறார்கள். காங்கிரஸின் 80, ம.ஜ.த.வின் 37, பகுஜன் சமாஜ் கட்சி, சுயேச்சை என தலா ஒரு உறுப்பினர்கள் என மொத்தம் 119 எம்எல்ஏக்களின் ஆதரவில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான ம.ஜ.த. -காங்கிரஸ் கூட்டணி அரசு அமைக்கப்பட்டுள்ளது.
பெரும்பான்மை பலத்தைவிட கூடுதலாக 6 எம்எல்ஏக்கள் மட்டுமே கூடுதலாக உள்ளனர். எனவே, கூட்டணி அரசை கவிழ்க்க ஆட்சிக்கு வந்தது முதலே தொடர் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வந்துள்ளது.
பாஜகவில் 6 எம்எல்ஏக்கள்? இந்த நிலையில், அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்ட ரமேஷ் ஜார்கிஹோளி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஆனந்த்சிங், நாகேந்திரா ஆகியோர் மும்பையில் முகாமிட்டுள்ளதாகவும், அவர்கள் உள்பட 6 எம்எல்ஏக்கள் விரைவில் பாஜகவில் சேரவிருப்பதாகவும் கடந்த சில நாள்களாக தகவல்கள் பரவி வருகின்றன. இதுதவிர, சில எம்எல்ஏக்கள் பாஜகவின் தொடர்பில் இருப்பதாகவும் கூறப்படுவதால், கூட்டணியில் தொடர்ந்து பதற்றம் நிலவியது.
இந்த நிலையில், பாஜக தேசிய செயற்குழுக் கூட்டத்தில் பங்கேற்க சென்ற கர்நாடக பாஜகவின் 104 எம்எல்ஏக்கள், கடந்த சில நாள்களாக புதுதில்லியிலேயே முகாமிட்டுள்ளனர். தேசியத் தலைவர் அமித் ஷாவை சந்திக்க இருப்பதாகக் கூறப்பட்டாலும், ஆட்சி மாற்றத்துக்கான அறிகுறிகள் தென்படுவதால் பாஜக எம்எல்ஏக்கள் புதுதில்லியில் முகாமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
புதுதில்லியில் பாஜக எம்எல்ஏக்கள் முகாம் ஏன்? இந்தச் சூழ்நிலையில், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிகளை மறுத்து பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா கூறியது:-
ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் பாஜக ஈடுபடவில்லை. பாஜகவின் நற்பெயரை கெடுப்பதற்காகவே முதல்வர் குமாரசாமி இதுபோன்ற செய்திகளை பரப்பி வருகிறார். பாஜக எம்எல்ஏக்கள் அடுத்த சில நாள்கள் புதுதில்லியிலேயே தங்கி மக்களவைத் தேர்தலுக்கான ஆலோசனையில் ஈடுபடுவார்கள். பணத்தாசை காட்டி பாஜக எம்எல்ஏக்களை இழுக்க முதல்வர் குமாரசாமி தான் முயற்சித்து வருகிறார் என்றார் அவர்.
இதே கருத்தை மத்திய புள்ளியியல் துறை அமைச்சர் சதானந்த கெளடாவும் தெரிவித்தார்.
ம.ஜ.த., காங்கிரஸின் வியூகம்: பாஜகவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அந்தக் கட்சி எம்எல்ஏக்களை இழுக்க ம.ஜ.த.வும், காங்கிரஸும் முயற்சிப்பதாகக் கூறப்படுகிறது. பாஜக எம்எல்ஏக்கள் தனது தொடர்பில் இருப்பதாக முதல்வர் குமாரசாமி கூறியிருப்பதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,ஆட்சிக்கு எந்த ஆபத்துமில்லை. காங்கிரஸ், ம.ஜ.த. எம்எல்ஏக்கள் யாரும் கட்சி மாற மாட்டார்கள். மும்பையில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் தொடர்பில் இருந்து வருகிறேன். ஜனவரி 17-ஆம் தேதி கர்நாடகத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வரும் என்று வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை என்றார் அவர்.
இந்த கருத்தை காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் கே.சி.வேணுகோபால், முன்னாள் முதல்வர் சித்தராமையா ஆகியோரும் வெளிப்படுத்தியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







