பணியிடமாற்றத்துக்கான காரணத்தை வெளியிட எவ்வித தயக்கமும் இல்லை: கொலீஜியம்

தலைமை நீதிபதிகளின் பணியிடமாற்றத்துக்கான காரணம் வெளியிடப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதில் உச்சநீதிமன்றத்துக்கு எவ்வித தயக்கமும் கிடையாது என்று கொலீஜியம் இன்று அறிக்கை வெளியிட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read


தலைமை நீதிபதிகளின் பணியிடமாற்றத்துக்கான காரணம் வெளியிடப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அதில் உச்சநீதிமன்றத்துக்கு எவ்வித தயக்கமும் கிடையாது என்று உச்சநீதிமன்றத்தின் பொதுச்செயலாளர் சஞ்சீவ் எஸ் கல்கோன்கர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீயை மேகாலயா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமித்து கொலீஜியம் பரிந்துரைத்தது. இந்த பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு தலைமை நீதிபதி வி.கே.தஹில ராமாணீ கோரிக்கை வைத்தார். ஆனால், அவருடைய கோரிக்கையை கொலீஜியம் நிராகரித்தது. இதையடுத்து, அவர் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

இதற்கு அரசியல் தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் தரப்பில் இருந்து கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், தலைமை நீதிபதி தஹில ராமாணீ அளித்த தீர்ப்புகளைக் குறிப்பிட்டு இதற்குப் பின்னணியில் அரசியல் தலையீடு இருக்கலாம் என்றும் விமரிசிக்கப்பட்டு வந்தது. 

இந்நிலையில், இதுபோன்ற தொடர் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கொலீஜியம் இன்று அறிக்கை வெளியிட்டது. அதில், 

"அண்மையில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள்/நீதிபதிகள் பணியிட மாற்றம் செய்வது தொடர்பான கொலீஜியம் பரிந்துரை குறித்து ஊடகங்களில் சில தகவல்கள் வெளியாகின. நீதித் துறை நிர்வாகத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் தெளிவான காரணங்களுக்காகத்தான், ஒவ்வொரு பணியிடமாற்றமும் பரிந்துரை செய்யப்படுகிறது. பணியிடமாற்றத்துக்கான காரணத்தை வெளிப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டால், அதை வெளியிட கொலீஜியத்துக்கு எவ்வித தயக்கமும் கிடையாது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மூத்த நீதிபதிகளுள் நீதிபதி தஹில ராமாணீயும் ஒருவர். சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பொறுப்பேற்பதற்கு முன்பு இவர் மும்பை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக (பொறுப்பு) இருந்தார். 

சென்னை உயர்நீதிமன்றத்தில் 75 நீதிபதிகள் உள்ளனர். மொத்தம் 4 லட்சத்துக்கும் மேலான வழக்குகள் நிலுவையில் உள்ளது. மறுபுறம், மேகாலயா உயர்நீதிமன்றம் 2013-இல் தொடங்கப்பட்டது. அங்கு வெறும் 3 நீதிபதிகள் மட்டுமே உள்ளனர்.

எனவே, நாட்டின் பழமையான, பெரிய உயர்நீதிமன்றத்தில் இருந்து ஒரு புதிய உயர்நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com