பிகாரில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும் என மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தேசியத் தலைவருமான நிதீஷ் குமார் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிர்வாகிகள் குழுக் கூட்டம், பிகார் தலைநகர் பாட்னாவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், நிதீஷ் குமார் பேசியதாவது:
அரசியலில் தெளிவான முடிவெடுக்கத் தெரியாதவர்களே, என்னை விமர்சித்து விளம்பரம் தேடிக் கொள்கின்றனர். அவர்களின் அவதூறான கருத்துகளுக்குக் கட்சி நிர்வாகிகளும், செய்தித் தொடர்பாளர்களும் பதிலளிக்க வேண்டாம் என அறிவுறுத்துகிறேன். கடந்த 2010-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைக்குமா என பல்வேறு தரப்பினர் சந்தேகம் எழுப்பினர். ஆனால், மொத்தமுள்ள 243 தொகுதிகளில், 206 இடங்களில் கூட்டணி வெற்றி பெற்றது. அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தேர்தலில், கூட்டணி 200க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெறும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜகவுக்கும், ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்குமிடையே பிளவு ஏற்பட்டு விட்டதாக சிலர் கருதுகின்றனர். அது உண்மையன்று. கூட்டணிக்குள் பிளவை ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் தோற்றுப்போவார்கள் என்பதை உறுதியுடன் தெரிவிக்கிறேன் என்றார் நிதீஷ் குமார்.
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசின் சில முக்கிய நடவடிக்கைகளை ஐக்கிய ஜனதா தளம் கட்சி வெளிப்படையாகவே விமர்சித்து வந்தது. இதனால், இருகட்சிகளிடையே பிளவு ஏற்பட்டுள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், முதல்வர் நிதீஷ் குமார் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.