ஜாகீர் நாயக்கை தேடப்படும் நபராக அறிவிக்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை

சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகீர் நாயக்கை தலைமறைவு நிதி மோசடியாளராக அறிவிக்குமாறு மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.
ஜாகீர் நாயக்கை தேடப்படும் நபராக அறிவிக்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை


சர்ச்சைக்குரிய மத போதகர் ஜாகீர் நாயக்கை தலைமறைவு நிதி மோசடியாளராக அறிவிக்குமாறு மும்பையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது.
மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவரான ஜாகீர் நாயக் (53) தனது மதப் பிரசாரங்களில் பிற மதங்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் வகையிலான கருத்துகளைக் கூறி வந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. அவர் தனது போதனைகள் மூலம் சமூகங்களுக்கு இடையே மோதலைத் தூண்டுவதாகவும், தீவிரவாதக் கருத்துகளைப் பரப்புவதாகவும் தேசியப் புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தது. 
அதன் அடிப்படையில் அவர் மீது அமலாக்கத்துறை கருப்புப் பண மோசடி வழக்கின் கீழ் அமலாக்கத்துறை 2016-இல் வழக்குப்பதிவு செய்தது. அவர் சுமார் ரூ.193 கோடி அளவுக்கு கருப்புப் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் தாம் கைது செய்யப்படலாம் என்று அஞ்சிய ஜாகீர் நாயக் அதே ஆண்டில் இந்தியாவை விட்டு வெளியேறி, முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நாடான மலேசியாவில் தஞ்சம் புகுந்தார். அங்கு அவருக்கு நிரந்தரக் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
ஜாகீர் நாயக்கிற்கு எதிரான வழக்கில் அவரது உதவியாளர்களான அமீர் கஸ்தார், நஜாமுதீன் சதக் ஆகிய இருவரையும் அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. மேலும், சென்னையில் உள்ள இஸ்லாமிய சர்வதேசப் பள்ளி, மும்பை மற்றும் புணேவில் உள்ள 2 கட்டடங்கள், 3 கிடங்குகள் உள்ளிட்ட அவரது சொத்துகளையும் முடக்கியது.
அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணையை பிறப்பிக்குமாறு அமலாக்கத்துறை மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் ஏற்கெனவே கோரியிருந்தது. அதை ஏற்ற நீதிமன்றம் ஜாகீர் நாயக்கிற்கு எதிராக கடந்த வாரம் பிடியாணை பிறப்பித்தது.
இந்நிலையில், அவரை தலைமறைவு நிதி மோசடியாளராக அறிவிக்குமாறு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை  திங்கள்கிழமை மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு மீது வரும் 30-ஆம் தேதி விசாரணை நதடத்தப்படும் என்று நீதிமன்றம் அறிவித்தது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com