ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில், நிதியமைச்சர் பதவியை சுய லாபத்துக்காக தாம் பயன்படுத்தவில்லை என்று முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், தில்லி உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
இந்த வழக்கு தொடர்பாக, கடந்த மாதம் 21-ஆம் தேதி கைதான ப.சிதம்பரம், தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில், அவரது நீதிமன்றக் காவலை அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி வரை சிறப்பு நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
இதனிடையே, தனக்கு ஜாமீன் கேட்டு தில்லி உயர்நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால், அவருக்கு ஜாமீன் வழங்குவதற்கு சிபிஐ எதிர்ப்பு தெரிவித்தது. நிதி முறைகேட்டின் தீவிரம், அமைச்சர் பதவியை தவறாகப் பயன்படுத்தியது ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, ப.சிதம்பத்தின் ஜாமீன் மனுவை நிராகரிக்க வேண்டும்; அவருக்கு ஜாமீன் வழங்குவது, ஊழல் வழக்குகளில் தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்று சிபிஐ தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சிபிஐயின் குற்றச்சாட்டுகளுக்கு ப.சிதம்பரம் மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் தில்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதி சுரேஷ் குமார் கைத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, ப.சிதம்பரம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் முன்வைத்த வாதம்:
ஊடகத் துறையில் 46.216 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த வரம்புக்கு உள்பட்டே ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டில் இருந்து ரூ.305 கோடியை முதலீடாகப் பெற்றது. இதில், நிதியமைச்சராகப் பதவி வகித்த ப.சிதம்பரம் தனது பதவியை சுய லாபத்துக்காகப் பயன்படுத்தவில்லை; அரசுக்கு இழப்பை ஏற்படுத்தவில்லை; பொதுமக்களின் பணம் சம்பந்தப்படவில்லை; வங்கி முறைகேடு நடைபெறவில்லை; இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்குப் பணம் கொண்டு செல்லப்படவில்லை; முதலீட்டாளர்கள் ஏமாற்றப்படவில்லை. இந்த விவகாரத்தில் அவர் ஊழல் செய்ததற்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதாக சிபிஐ முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை ஏற்க முடியாது.
வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்து வெளிநாட்டுக்கு சென்று விடுவார் என்ற நோக்கத்துடன் கண்காணிக்கப்படும் நபராக ப.சிதம்பரத்தை அறிவித்து சிபிஐ ஏற்கெனவே நோட்டீஸ் வெளியிட்டது என்று கபில் சிபல் வாதிட்டார். அவரது வாதம் நிறைவடையாததால், வழக்கு செவ்வாய்க்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2007-இல் மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் பதவி வகித்தபோது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு நிதியைப் பெற்றது. இந்த நிதியைப் பெறுவதற்காக, மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் முறைகேடாக அனுமதி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் உதவியதாகவும், அதற்குப் பிரதிபலனாக அவர் ஆதாயம் அடைந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கடந்த 2017-இல் சிபிஐ வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மத்திய அரசின் தலையீட்டால் டிஜிபி மாற்றம்: மு.வீரபாண்டியன் குற்றச்சாட்டு

புதிய நிதியாண்டில் பயணிகள் வாகன விற்பனை குறைய வாய்ப்பு: ஐசிஆா்ஏ கணிப்பு

பில்லி ஜீன் கிங் கோப்பை டென்னிஸ்: தயாராகிறது இந்திய அணி

ஆப்கான்-பாகிஸ்தான் பேச்சுவாா்த்தையில் முன்னேற்றம் : சீனா தகவல்
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


