சுடச்சுட

  

  உள்துறை அமைச்சர் முதல் திஹார் சிறை வரை..! - ஐ.என்.எக்ஸ் வழக்கில் ப.சிதம்பரத்தின் பயணம்..

  By Muthumari  |   Published on : 05th September 2019 06:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pchidambaram-karthichidambaram

  ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ப.சிதம்பரத்தை 15 நாட்கள் திஹார் சிறையில் அடைக்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் முழு விபரம் சுருக்கமாக..

  ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் மும்பையில் கடந்த 2007ம் ஆண்டு இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜி ஆகியோரால் தொடங்கப்பட்டது. அந்த சமயத்தில் மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி இருந்து வந்தது.  மத்திய நிதி அமைச்சராகப் ப.சிதம்பரம் பதவி வகித்தார். 

  ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனம் ரூ.305 கோடி வெளிநாட்டு முதலீட்டைப் பெற, ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரம், மத்திய நிதியமைச்சகத்தின் கீழ் இயங்கும் அந்நிய நேரடி முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதியை பெற்றுத் தந்ததாகவும், இதற்காக ஐ.என்.எக்ஸ். நிறுவனத்திடம் இருந்து கார்த்தி சிதம்பரம் ரூ.10 லட்சம் லஞ்சமாக பெற்றதாகவும் கூறப்பட்டது. இதில், மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்ததாக கடந்த 2017 மே மாதம் 15ம் தேதி ப.சிதம்பரத்தின் மீது சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. 

  ஜூன் 16, 2017: கார்த்தி சிதம்பரம் வெளிநாடு சென்று தப்பிக்காமல் இருக்க மத்திய உள்துறை அமைச்சகம் அவர் மீது 'தேடப்படும் நபர்' என்ற லுக் அவுட் நோட்டீஸைப் பிறப்பித்திருந்தது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைடைய 4 பேருக்கும் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. 

  ஆக. 10, 2017: கார்த்தி சிதம்பரத்தின் மீதான லுக் அவுட் நோட்டீஸிற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது. 

  ஆக. 14, 2017: கார்த்தி சிதம்பரத்தின் மீதான லுக் அவுட் நோட்டிஸிற்கு உச்ச நீதிமன்றமும் தடை விதித்தது. அப்போது சிபிஐ விசாரணை முன்பாக கார்த்தி சிதம்பரம் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ வாதிட்டது. 

  ஆக. 18, 2017: ஆகஸ்ட் 23ம் தேதிக்குள் கார்த்தி சிதம்பரம் சிபிஐ அதிகாரிகள் முன்பாக ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. 

  செப்.11, 2017: கார்த்தி சிதம்பரம் வெளிநாடு சென்ற போது, அவர் செய்த பணபரிவர்த்தனைகள் மற்றும் வெளிநாடுகளில் அவர் பெயரில் உள்ள சொத்துக்கள் குறித்த அறிக்கையினை சிபிஐ தாக்கல் செய்தது. 

  செப்.22, 2017:  கார்த்தி சிதம்பரத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருப்பதால் அவரை வெளிநாடு செல்ல தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் சிபிஐ கோரியது. வெளிநாட்டில் உள்ள அவரது வங்கிக்கணக்குகளையும் முடக்க வேண்டும் என்றும் கூறியது. 

  அக்.9, 2017: கார்த்தி சிதம்பரம் தனது மகளின் படிப்புக்காக வெளிநாடு சென்று வரவேண்டும் என்று அனுமதி கோரினார்.  அதன்படி, பல்வேறு நிபந்தனைகளுடன் நீதிமன்றம் அனுமதி அளித்தது. நவம்பர் மாதம் 20ம் தேதி ஒரு வாரத்திற்கு அவர் வெளிநாடு சென்றார். இதே நேரத்தில் ஏர்செல்- மேக்சிஸ் வழக்கிலும் கார்த்தி சிதம்பரத்தின் மீது சிபிஐ விசாரணை செய்தது. 

  தன் மீதும், தனது மகன் கார்த்தி மீதும் அரசியலில் பழி தீர்க்கும் செயலில் பாஜக அரசு ஈடுபடுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். 

  தொடர்ந்து 2018ம் ஆண்டு மே மாதம், இந்த விவகாரத்தில் கருப்புப் பண முறைகேடு நடந்ததாகக் கருதி அமலாக்கத் துறை வழக்குப்பதிவு செய்தது.ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் மீது  சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை, தனித்தனியே வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வந்தது.

  ஜன.31, 2018: கார்த்தி சிதம்பரத்தின் லுக் அவுட் நோட்டீஸ் மீதான தடையை உச்ச நீதிமன்றம் நீக்கியது. 

  பிப்.16, 2018: கார்த்தி சிதம்பரத்தின் நெருங்கிய நண்பரும், ஆடிட்டருமான பாஸ்கரன் ராமனை அமலாக்கத் துறையினர் கைது செய்தனர். அதே நேரத்தில் தான் கார்த்தி சிதம்பரம் தான் வெளிநாடு செல்ல வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்திடம் அனுமதி கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். 

  பிப்.20, 2018: பிப்ரவரி 20ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை அவர் வெளிநாடு செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தது. 

  பிப்.28, 2018: கார்த்தி லண்டன் சென்று திரும்பி வந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் வைத்தே கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

  மார்ச் 23, 2018: பின்னர் ஜாமீன் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், 23 நாட்களுக்கு பிறகு கார்த்தி சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது.  தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகளால் அவர் விசாரணை செய்யப்பட்டு வந்தார். 

  ஜூலை 25, 2018: கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. 

  அக்.11, 2018: அதேபோன்று 2018 டிசம்பர் மாதம் மற்றும் 2019 ஜனவரி மாதங்களில் ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். அதே நேரத்தில் அவரை கைது செய்வதற்கான தடையை டெல்லி உயர்நீதிமன்றம் தொடர்ந்து நீட்டித்து வந்தது. 

  மார்ச்  29, 2019: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைேகேடு வழக்கு தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் 22 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.  

  ஜூலை 4, 2019: இந்த வழக்கில் ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவன இயக்குனர் இந்திராணி முகர்ஜி மற்றும் அவரது கணவர் பீட்டர் முகர்ஜியிடமும் சிபிஐ விசாரணை நடத்தி வந்தது. அப்ரூவராக மாற விரும்புவதாக இந்திராணி முகர்ஜி கூறியதற்கு, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியது.   

  ஆக. 1, 2019: கார்த்தி சிதம்பரம் ஜோர் பாக்கில் உள்ள தனது வீட்டை காலி செய்யும்படி, அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது. அப்போதும், பாஜக அரசு அரசியல் பழிவாங்கும் செயலில் ஈடுபடுவதாக ப.சிதம்பரம் குற்றம் சாட்டினார். 

  ஆக. 20, 2019: ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் மீதான குற்றச்சாட்டு உறுதியாகிறது என்று கூறி அவரது தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட முன் ஜாமீன் மனுவை தில்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேலும், இதையடுத்து 2 மணி நேரத்திற்குள் அவர் சிபிஐ துணை கண்காணிப்பாளர் முன்பாக ஆஜராக வேண்டும் என்று அதிகாரிகள் அவரது வீட்டின் முன்பு நோட்டீஸ் ஒட்டிவிட்டுச் சென்றனர்.

  தகவலறிந்த சிதம்பரத்தின் தரப்பு உடனடியாக முன்ஜாமீன் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. ஆனால், இந்த மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்யவே, ப.சிதம்பரத்தை கைது செய்யும் நோக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் இறங்கினர். கடந்த 17 மணி நேரத்தில் அதிகாரிகள் 4 முறை அவரது வீட்டுக்கு வருகை தந்துள்ளனர். 

  மேலும் படிக்க: வேட்புமனுவோடு தாக்கல் செய்த சொத்து விவரங்கள்! ப.சிதம்பரம் சிக்கிய கதை

  முன்ஜாமின் கோரிய மனுக்களை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, ப.சிதம்பரம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதற்கிடையே, வெளிநாடு தப்பிச் செல்வதைத் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ப.சிதம்பரத்துக்கு எதிராக அமலாக்கத் துறை லுக் அவுட் நோட்டீஸை பிறப்பித்துள்ளது.

  உச்ச நீதிமன்றம், மனுவை விசாரித்து முன்ஜாமீன் வழங்கினால் மட்டுமே ப.சிதம்பரம் தாற்காலிகமாக இந்த வழக்கில் இருந்து தப்பிக்கும் சூழ்நிலை இருந்தது. ஆனால், முன்ஜாமீன் கோரிய மனுக்களை உச்ச நீதிமன்றம்  மற்றும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 

  ஆகஸ்ட் 22, 2019 அன்று ப.சிதம்பரம் சிபிஐ அதிகரிகளால் வீடு புகுந்து கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு ஏற்ப, சிதம்பரம் 15 நாட்கள் சிபிஐ காவலில் இருந்தார். காவல் முடிவடைந்த நிலையில், இன்று மீண்டும் டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

  திகார் சிறையில் 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் இருக்கப் போகிறார் சிதம்பரம்

  அப்போது அவரை திஹார் சிறையில் அடைக்க வேண்டும் என்று சிபிஐ தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதே நேரத்தில், நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்க வேண்டாம் என்றும் அதற்கு பதிலாக தான் அமலாக்கத்துறையிடம் விசாரணைக்கு சரணடையத் தயார் என்றும் சிதம்பரம் தரப்பில் மிகவும் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. விசாரணை முடிவில் நீதிமன்றம், சிதம்பரத்தின் கோரிக்கைகளை நிராகரித்து, சிதம்பரத்தை செப்டம்பர் 19ம் தேதி வரை திகார் சிறையில் தனியறையில் வைக்க சிபிஐ நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, சிபிஐ கைதுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தான் தொடர்ந்த வழக்கை அவர் வாபஸ் பெற்றார்.

  சிபிஐ  நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்தின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது அவரது தரப்புக்கு பெரும் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. இதனால், இனிமேல் கைதில் இருந்து தப்பிக்க சிதம்பரத்திற்கு வாய்ப்பில்லாமல் போயுள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai