தில்லியில் மீண்டும் அமலுக்கு வரும் வாகனக் கட்டுப்பாடு திட்டம்: யாருக்கெல்லாம் விதிவிலக்கு?

தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதை அடுத்து, தில்லியில்  வாகனக் கட்டுப்பாடு திட்டம் மீண்டும் அமலுக்கு வருகிறது.
அரவிந்த் கேஜரிவால்
அரவிந்த் கேஜரிவால்

தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதை அடுத்து, தில்லியில்  வாகனக் கட்டுப்பாடு திட்டம் மீண்டும் அமலுக்கு வருகிறது.

அண்டை மாநிலங்களான ஹரியாணா, பஞ்சாப், உத்தரப் பிரதேசத்தில் ஏராளமான வேளாண் கழிவுகள் எரிக்கப்படுவதால் தில்லியில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. இதனால் வரும் காலங்களில் காற்றின் தரம் இதைவிட மோசமாக இருக்கும் என்றும் இதனைத் தடுக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தில்லி அரசுக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது. 

இதையடுத்து, தில்லியில் காற்று மாசுபாடைக் குறைக்க வாகன கட்டுப்பாடு திட்டம் மீண்டும் அமலுக்கு வரவுள்ளது. கடந்த 2016ம் ஆண்டு தில்லியில் காற்று மாசுபாட்டைக் குறைக்க அர்விந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு இந்த வாகனக் கட்டுப்பாடு திட்டத்தை கொண்டு வந்தது. இது ஒற்றை, இரட்டை இலக்கப் பதிவு எண் அடிப்படையில் வாகனம் ஓட்டும் திட்டம் ஆகும்.  இந்தத் திட்டத்தின்படி, தில்லியில் காற்று மாசுபாடு வெகுவாக குறைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது தில்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதை அடுத்து, வருகிற நவம்பர் 4ம் தேதி முதல் 15ம் தேதி வரை இந்தத் திட்டம் மீண்டும் அமலுக்கு வரவிருக்கிறது. 

ஏற்கனவே ஆளுநர், தலைமைச் செயலர்கள், அரசு உயர் அதிகாரிகளுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள நிலையில், மாற்றுத் திறனாளிகளுக்கும் விலக்கு அளித்து முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். 

மேலும், இந்த விதிமுறைகளில் இருந்து இருசக்கர வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்படுமா? என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தகவல் தெரிவித்துள்ளார்.

வாகனக் கட்டுப்பாடு திட்டத்தில் யாருக்கெல்லாம் விதிவிலக்கு: 

குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், ஆளுநர்கள், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மத்திய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள், ஆம்புலன்ஸ், அமலாக்கத்துறை வாகனங்கள், ராணுவ வாகனங்கள், பாரா-மிலிட்டரி வாகனங்கள், விமானிகள், தூதரக அதிகாரிகள், எஸ்.பி.ஜி வாகனங்கள், பெண்கள் மட்டும் தனியாக பயணிக்கும் வாகனங்கள், பாதுகாப்பு அதிகாரிகள், பள்ளிக் குழந்தைகளின் வாகனங்கள், மாற்றுத் திறனாளிகள், மருத்துவ சிகிச்சைக்காக செல்லும் நோயாளிகள் ஆகியோருக்கு இந்த விதிமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com