காஷ்மீர் மக்கள் செத்துக்கொண்டிருக்கிறார்கள்: கம்யூனிஸ்ட் தலைவர் தரிகாமி

காஷ்மீர் மக்கள் செத்துக்கொண்டிருப்பதாகவும், அங்கு நெருக்கடியான சூழல் நிலவுவதாகவும் காஷ்மீரைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் முகமது யூசுப் தரிகாமி இன்று (செவ்வாய்கிழமை) தெரிவித்தார்.
தில்லியில் செய்தியாளர்களைச் சந்திக்கும் முகமது யூசுப் தரிகாமி
தில்லியில் செய்தியாளர்களைச் சந்திக்கும் முகமது யூசுப் தரிகாமி


காஷ்மீர் மக்கள் செத்துக்கொண்டிருப்பதாகவும், அங்கு நெருக்கடியான சூழல் நிலவுவதாகவும் காஷ்மீரைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் முகமது யூசுப் தரிகாமி இன்று (செவ்வாய்கிழமை) தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது. இதைத்தொடர்ந்து, காஷ்மீர் சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவருமான முகமது யூசுப் தரிகாமி கடந்த ஆகஸ்ட் 5 முதல் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார். இதையடுத்து, தரிகாமியை காஷ்மீர் சென்று நேரில் சந்திக்க சீதாராம் யெச்சூரிக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன்பிறகு தரிகாமியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி அவர் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

மேலும் படிக்க: காஷ்மீர் பயணம் குறித்து அறிக்கை: உச்சநீதிமன்றத்தில் யெச்சூரி தாக்கல்
   
இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி மற்றும் முகமது யூசுப் தரிகாமி ஆகியோர் தில்லியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய தரிகாமி, 

"நான், அப்துல்லா மற்றும் பிறர் ஒன்றும் பயங்கரவாதிகள் அல்ல. மிகவும் கொடூரமான நேரம் இது. நான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளேன். 40 நாட்களாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரசு அங்கு இயல்பு நிலை நிலவுவதாக தெரிவிக்கிறது. இதை தில்லியிலோ அல்லது மற்ற நகரங்களிலோ செய்யுங்கள். அதன்பிறகு அந்த நகரத்தின் வணிகம், மருத்துவமனை, பள்ளிகள் மற்றும் ஊடகங்களின் நிலையைப் பாருங்கள். 

அவர்கள் எப்படி நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது என்று சொல்லலாம்? இதுவரை யாரும் கொல்லப்படவில்லை என்று கூறுகிறார்கள். நான் சொல்கிறேன், மக்கள் அங்கு செத்துக்கொண்டிருக்கிறார்கள். காஷ்மீரில் இன்னும் நெருக்கடி நிலவுகிறது. என் தரப்பு குரலை கேளுங்கள். காஷ்மீர் மக்கள் தரப்பு குரலை கேளுங்கள். நாங்கள் அனைவரும் நிம்மதியாக வாழ விரும்புகிறோம். நான் வெளிநாட்டைச் சேர்ந்தவன் அல்ல.  

இன்றைக்கு காஷ்மீர் அரசியல் தலைவர்கள் சிறையில் உள்ளனர். எல்லைக்கு மறுபுறம் உள்ளவர்கள், எங்களால் செய்ய முடியாததை நீங்கள் செய்துள்ளீர்கள் என்று கொண்டாடுகிறார்கள். காஷ்மீரில் தற்போது நடப்பது, நாட்டு நலனுக்கானது அல்ல. காஷ்மீர் மக்களுக்கு தற்போது இன்றைய ஆட்சி மீது பெரிய எதிர்பார்ப்புகள் எதுவும் கிடையாது. 

மக்களை அடித்து, சிறையில் அடைத்து, இணையதளம் மற்றும் தொலைத்தொடர்பை ரத்து செய்து, மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்கி உங்களால் அவர்கள் மனதில் நம்பிக்கையை வளர்க்க முடியுமா?" என்றார்.

மேலும் படிக்க: தேவைப்பட்டால் காஷ்மீர் செல்வேன்: நீதிபதி ரஞ்சன் கோகோய் 

இதைத்தொடர்ந்து, சீதாராம் யெச்சூரி பேசுகையில், 

"அரசு தெரிவிப்பதில் இருந்து முற்றிலும் மாறான ஒரு சூழல்தான் அங்கு நிலவுகிறது. மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டு 40 நாட்களாகிவிட்டது. காஷ்மீரில் இருந்து தொடர்பு முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர்பு இடைவெளி மக்களை தனிமைப்படுத்தியுள்ளது. அங்கு போக்குவரத்துச் சேவையே இல்லை. மருத்துவமனைகளில் சிகிச்சை மற்றும் மருந்துகளில் பற்றாக்குறை இருப்பதாகவும் தகவல்கள் வருகிறது. காஷ்மீரில் நிலவும் சூழல் முன்னேற்றம் காண வேண்டும்" என்றார். 

கடந்த ஆகஸ்ட் 5 முதல் வீட்டுக்காவலில் உள்ள தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா ஞாயிற்றுக்கிழமை இரவு பிஎஸ்ஏ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com