ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

சோனியா விலகல்? தலைவர்கள் கடிதத்தால் சர்ச்சை, நாளை கூடுகிறது செயற்குழு

​காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை (திங்கள்கிழமை) நடைபெறவுள்ள நிலையில், கட்சித் தலைவர் விவகாரம் பற்றி கருத்து வேறுபாடுகள் நிலவி வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

News image
Updated On :23 ஆகஸ்ட் 2020, 11:44 am

ANI

இடைக்காலத் தலைவர் பதவியிலிருந்து சோனியா காந்தி விலகுவதாகக் கூறப்படும் நிலையில்,  புதிய தலைவர் தெரிவு தொடர்பாகக் கட்சியின் தலைவர்களிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நாளை (திங்கள்கிழமை) கூடவுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவராக சோனியா காந்தி பொறுப்பேற்று ஓர் ஆண்டு காலமான நிலையில், கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற பேச்சுகள் கட்சிக்குள் எழத் தொடங்கியுள்ளன.

மூத்த தலைவர்கள் அடங்கிய ஒரு பிரிவினர் சோனியா காந்திக்குக் கடிதம் இதுபற்றி எழுதியுள்ளதாகவும், மற்றொரு பிரிவினர் ராகுல் காந்தியே மீண்டும் தலைவராகப் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் கூறப்படுகிறது.

கட்சியின் செயல்பாடுகள் குறித்து கேள்விகளையும் பரிந்துரைகளையும் முன்வைத்து செயற்குழு உறுப்பினர்கள் சிலர், எம்.பி.க்கள் மற்றும் தலைவர்கள் உள்ளிட்டோர் சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளனர். ஐந்து பக்கங்கள் கொண்ட இந்தக் கடிதத்தை மூத்த தலைவர்கள் இருவர் எழுதியிருந்தாலும், மற்ற தலைவர்கள் அதற்கு ஒப்புதல் அளிக்கும் வகையில் கையெழுத்திட்டுள்ளனர். இதில் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தியை வெளிப்படையாக விமரிசிக்காதபோதிலும், கட்சியின் தலைமை மீது குறிப்பாக ராகுல் காந்தி மீதான நம்பிக்கையின்மையை வெளிப்படுத்தியுள்ளதாகத் தெரிகிறது என காங்கிரஸ் வட்டாரங்களில் கூறப்படுகிறது.

இந்தக் கடிதத்தில் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல், மணீஷ் திவாரி, சசி தரூர், ஜிதின் பிரசாத், வீரப்ப மொய்லி, சந்தீப் தீட்சித், பிரமோத் திவாரி, பிஜே குரியன் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டதை எந்தத் தலைவரும் இதுவரை ஒப்புக்கொள்ளவில்லை. இதனிடையே, இதுபோன்ற கடிதம் எதையும் கட்சி பெறவில்லை என்றும் காங்கிரஸ் மறுத்துள்ளது.

இந்த விவகாரத்தில் தொடர்புடைய பெயர் தெரிவிக்க விரும்பாத தலைவர் ஒருவர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து விஷயங்களையும் கையெழுத்திட்ட தலைவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால், அதில் குறிப்பிடப்பட்டுள்ள விவகாரங்கள் மற்றும் தலைவர் பதவி பற்றிய விவகாரங்கள் பற்றியும் முடிவெடுக்க வேண்டும். கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்க ராகுல் காந்தி தயாராக இருந்தால், அதை முழுமனதாக வரவேற்கும் முதல் நபர் நான்தான்" என்றார் அவர்.    

இந்தக் கடிதம் பற்றி அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தாதபோதிலும், இதற்கு எதிர்வினைகள் எழத் தொடங்கியுள்ளன. நடப்பவை ராகுல் காந்திக்கு எதிரான சதி என்று காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிரூபம் தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழலில்தான் நாளை, திங்கள்கிழமை காங்கிரஸ் செயற்குழு கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தியை நியமிக்க கோரிக்கைகள் எழுப்பப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இதுபற்றி காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்ததாவது:

"நாளை நடைபெறவுள்ள செயற்குழுக் கூட்டத்தில் கட்சியின் அமைப்பு முறை பற்றி முக்கிய ஆலோசனைகள் நடத்தப்படவுள்ளன. எனவே, இந்தக் கூட்டத்துக்கு அனைத்து 52 உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றனர்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக, இதுபோன்ற கூட்டங்கள் காணொலி வாயிலாக நடைபெற்று வருகின்றன. பொதுவாக ஸூம் ஆப்பில் நடைபெறும் கூட்டங்கள், இந்த முறை இன்னும் கூடுதல் பாதுகாப்பான சிஸ்கோ வெப்எக்ஸ் ஆப்பில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.