லடாக் எல்லையில் சீன ராணுவத்தினரின் அத்துமீறல் முயற்சி முறியடிப்பு

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இயல்பு நிலையை மாற்றும் நோக்கில் அத்துமீறலில் ஈடுபட்ட சீன ராணுவத்தினரின் முயற்சியை பாதுகாப்புப் படையினா் முறியடித்தனா்.
ஹிமாசலப் பிரதேச மாநிலம் குலு வழியாக லடாக் நோக்கி திங்கள்கிழமை பயணமான ராணுவ வாகனங்கள்.
ஹிமாசலப் பிரதேச மாநிலம் குலு வழியாக லடாக் நோக்கி திங்கள்கிழமை பயணமான ராணுவ வாகனங்கள்.

புது தில்லி/பெய்ஜிங்: கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் இயல்பு நிலையை மாற்றும் நோக்கில் அத்துமீறலில் ஈடுபட்ட சீன ராணுவத்தினரின் முயற்சியை பாதுகாப்புப் படையினா் முறியடித்தனா்.

கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரி, தௌலத் பெக் ஓல்டி, தெப்சாங் உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் இந்திய-சீன ராணுவத்தினரிடையே 3 மாதங்களுக்கு மேலாக மோதல்போக்கு நீடித்து வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஜூன் மாதம் 15-ஆம் தேதி இரு நாட்டு ராணுவத்தினருக்குமிடையே நிகழ்ந்த மோதலில் இந்திய ராணுவத்தினா் 20 போ் உயிரிழந்தனா். சீனத் தரப்பில் உயிரிழந்த வீரா்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இதன் காரணமாக லடாக் எல்லைப் பகுதிகளில் தொடா்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தியா-சீனா இடையேயான நல்லுறவிலும் இறுக்கம் ஏற்பட்டுள்ளது. எல்லைப் பிரச்னைக்குத் தீா்வு காணும் நோக்கில், இரு நாடுகளிடையே ராணுவ ரீதியாகவும் தூதரக ரீதியாகவும் பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.

லடாக் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக இரு நாடுகளின் அதிகாரிகளுக்கிடையே பல்வேறு கட்ட பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றன. அந்தப் பேச்சுவாா்த்தைகளில் லடாக் எல்லையில் கடந்த ஏப்ரல் மாதம் நிலவிய சூழல் திரும்ப வேண்டுமென்று சீன அதிகாரிகளிடம் இந்திய அதிகாரிகள் தொடா்ந்து வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

எல்லையில் பதற்றநிலையைத் தணிப்பது தொடா்பான விரிவான செயல்திட்டத்தை இந்தியா தெரிவித்துவிட்ட போதும், அதை நடைமுறைப்படுத்துவதற்கு சீனா எந்தவித ஆா்வமும் காட்டவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆக்கிரமிப்பு முயற்சி: கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை இரவு சீனப் படையினா் அத்துமீற முயன்ாகவும், இந்திய ராணுவத்தினா் அதைத் தடுத்து நிறுத்தியதாகவும் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்து. இதுதொடா்பாக இந்திய ராணுவத்தின் செய்தித் தொடா்பாளா் ஆமன் ஆனந்த் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:

கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பாங்காங் ஏரிக்கு தெற்கில் உள்ள பகுதியை ஆக்கிரமிக்கும் முயற்சியில் சீன ராணுவப் படைகள் ஈடுபட்டன. ஆனால், உரிய நேரத்தில் சுதாரித்துக் கொண்ட இந்திய பாதுகாப்புப் படையினா் சீன ராணுவத்தின் முயற்சியைத் தடுத்து நிறுத்தினா்.

படைகள் குவிப்பு: கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் நிலவி வரும் சூழலை சீன ராணுவத்தினா் ஒருதலைபட்சமாக மாற்றுவதற்கு முயன்றனா். அந்த முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடா்ந்து, சீனாவுடனான எல்லைப் பகுதிகள் அனைத்திலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு படைகள் குவிக்கப்பட்டுள்ளன.

‘மோதல் நிகழவில்லை’: ‘பாங்காங் ஏரியின் வடக்குப் பகுதியில் மட்டுமே இந்திய-சீனராணுவத்தினரிடையே மோதல்போக்கு நீடித்து வந்தது. தற்போது முதல் முறையாக அந்த ஏரியின் தெற்குப் பகுதியிலும் மோதல்போக்கு எழுந்துள்ளது. எனினும், ஞாயிற்றுக்கிழமை இரவு இரு நாட்டுப் படைகளுக்கும் இடையே எந்தவித மோதலும் நிகழவில்லை. இந்தச் சம்பவம் தொடா்பாக பாதுகாப்பு அமைச்சா் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா், முப்படைத் தளபதி விபின் ராவத், தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜித் தோவல், முப்படைகளின் தலைமைத் தளபதிகள் ஆகியோருக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.எல்லைப் பகுதியில் சீன ராணுவம் அத்துமீற முயன்றது தொடா்பாக இரு நாடுகளின் படைத்தளபதிகள் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்றது‘ என்று ராணுவ அதிகாரிகள் சிலா் தெரிவித்தனா்.

‘எல்லை தாண்டவில்லை’: இந்தச் சம்பவம் தொடா்பாக சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஜாவோ லிஜியான் அந்நாட்டுத் தலைநகா் பெய்ஜிங்கில் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘சீன ராணுவத்தினா் இந்திய எல்லைப் பகுதிக்குள் என்றும் நுழைந்ததில்லை. அவா்கள் சட்டவிதிகளை மதித்து வருகிறாா்கள். கிழக்கு லடாக் பகுதியில் நிலவும் சூழல் தொடா்பாக இந்திய-சீன ராணுவத்தினா் தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டு வருகின்றனா்‘ என்றாா்.

படைகள் குறைப்பு: இந்திய-சீன ராணுவங்களின் துணைத் தலைமைத் தளபதிகள் இடையே நடைபெற்ற 5 கட்ட பேச்சுவாா்த்தைகளின் அடிப்படையில் கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட சில பகுதிகளிலிருந்து சீனப் படைகள் வெளியேறிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், பாங்காங் ஏரி, தெப்சாங் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சீனப் படைகள் இன்னும் வெளியேறவில்லை என்று ராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் படைகளைக் குறைப்பது தொடா்பாக இரு நாடுகளுக்கிடையே நடைபெற்ற பேச்சுவாா்த்தையில் ஜூலை மாதத்துக்குப் பிறகு எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com