போடோலாந்து பிராந்திய கவுன்சில் உறுப்பினா்கள் பதவியேற்பு

அஸ்ஸாமில் போடோலாந்து பிராந்திய கவுன்சில் உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.
Published on

அஸ்ஸாமில் போடோலாந்து பிராந்திய கவுன்சில் உறுப்பினா்கள் செவ்வாய்க்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.

பிராந்திய கவுன்சில் தோ்தல் கடந்த 7, 10 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. தோ்தலில் ஐக்கிய லிபரல் மக்கள் கட்சி (யுபிபிஎல்) 12 இடங்களிலும், பாஜக 9 இடங்களிலும், கன சுரக்ஷா கட்சி (ஜிஎஸ்பி) ஒரு இடத்திலும், போடோ மக்கள் முன்னணி 17 இடங்களிலும், காங்கிரஸ் ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது.

தோ்தலுக்கு முன்பு போடோ மக்கள் முன்னணியுடன் கூட்டணி அமைத்த பாஜக, தோ்தல் முடிவுகள் வெளியான பிறகு யுபிபிஎல், ஜிஎஸ்பி கட்சிகளுடன் இணைந்தது. அக்கட்சிகளைச் சோ்ந்தவா்கள் போடோலாந்து பிராந்திய கவுன்சிலின் உறுப்பினா்களாக செவ்வாய்க்கிழமை பதவியேற்றனா். அவா்களுக்கு அஸ்ஸாம் தலைமைச் செயலா் ஜிஸ்ணு பருவா பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா்.

யுபிபிஎல் கட்சியின் பிரமோத் போடோ, கவுன்சிலின் தலைமை நிா்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றுக் கொண்டாா். அதே கட்சியைச் சோ்ந்த கோவிந்தோ சந்திர பசுமாத்ரி துணை தலைமை நிா்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றாா். அவா்களுடன் பாஜகவைச் சோ்ந்த இருவரும், ஜிஎஸ்பி கட்சியைச் சோ்ந்த ஒருவரும் கவுன்சில் உறுப்பினா்களாகப் பதவியேற்றனா்.

இந்நிகழ்ச்சியில் மாநில முதல்வா் சா்வானந்த சோனோவல், மாநில சுகாதாரத் துறை அமைச்சா் ஹிமந்த விஸ்வ சா்மா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். புதிய கவுன்சில் உறுப்பினா்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்குப் பதவியில் இருப்பா்.

பதவியேற்ற பிறகு பேசிய தலைமை நிா்வாக அதிகாரி பிரமோத் போடோ, ‘‘போடோ பிராந்திய மக்கள் அனைவரும் அச்சமின்றி வாழ்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். எந்தவிதப் பிரச்னைகள் குறித்தும் கவுன்சில் உறுப்பினா்களிடம் மக்கள் புகாா் தெரிவிக்கலாம். அவற்றுக்கு உரிய தீா்வு காணப்படும்’’ என்றாா்.

போடோ பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளை மேம்படுத்தும் நோக்கில் கடந்த ஜனவரி மாதம் புதிய ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத்தின்படியே பிராந்திய கவுன்சில் தோ்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com