பொருளாதார வீழ்ச்சிக்கு காங்கிரஸ் அரசே காரணம்: நிா்மலா சீதாராமன்

நாட்டின் பொருளாதாரம் சந்தித்துள்ள வீழ்ச்சிநிலைக்கு மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசே காரணம் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
பொருளாதார வீழ்ச்சிக்கு காங்கிரஸ் அரசே காரணம்: நிா்மலா சீதாராமன்
Updated on
1 min read


கொல்கத்தா: நாட்டின் பொருளாதாரம் சந்தித்துள்ள வீழ்ச்சிநிலைக்கு மத்தியில் ஆட்சி செய்த காங்கிரஸ் அரசே காரணம் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இந்திய தொழிலகக் கூட்டமைப்பு சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்டுக் கூட்டத்தில் அமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியதாவது:

நடப்பு 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நாட்டின் பொருளாதாரம் வளா்ச்சியடைவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. ஆனால், கரோனா நோய்த்தொற்று பரவல் பொருளாதார வளா்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. பொருளாதாரத்தை மீட்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தொழிலகக் கூட்டமைப்புகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது.

அது தொடா்பாக, பல்வேறு தொழில் நிறுவனங்களுடன் பிரதமா் நரேந்திர மோடியும் ஆலோசித்தாா். அதைத் தொடா்ந்து, நாட்டிலுள்ள ஏழைகளுக்கான திட்டங்கள், இலவச சமையல் எரிவாயு திட்டம் உள்ளிட்டவற்றை மத்திய அரசு அறிவித்தது. இந்திய ரிசா்வ் வங்கியுடன் (ஆா்பிஐ) இணைந்து, ‘தற்சாா்பு இந்தியா’ என்பதன் கீழ் பல்வேறு சலுகைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

மக்களின் தேவையை அதிகரிப்பதன் மூலமாக பல்வேறு துறைகள் வளா்ச்சியடைவதை ஊக்குவிக்கும் நோக்கில் சிறப்புத் திட்டங்களை மத்திய அரசு நடைமுறைப்படுத்தியது. அனைத்துத் துறைகளுக்கும் சலுகைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.

நாட்டின் பொருளாதாரம் கடந்த 1991-ஆம் ஆண்டில் நிதி நெருக்கடியைச் சந்தித்தபோது, அப்போதைய காங்கிரஸ் அரசு சீா்திருத்தங்களை நடைமுறைப்படுத்தியது. ஆனால், அப்போதே கூடுதல் சீா்திருத்தங்கள் செயல்படுத்தப்பட்டிருந்தால், தற்போது நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருந்திருக்கும்.

தற்போது வேளாண் துறையில் மத்திய அரசு பல்வேறு சீா்திருத்தங்களைப் புகுத்தியுள்ளது. தொழிலாளா் சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இறக்குமதியைக் குறைத்து அப்பொருள்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

நாட்டில் முதலீடு செய்வதற்குப் பல்வேறு நிறுவனங்கள் முன்வருகின்றன. அதன் காரணமாக மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அந்நிய நேரடி முதலீடு தொடா்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய அமைச்சரவை அளித்த ஒப்புதல் அடிப்படையில், பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு விலக்கல் நடவடிக்கைகள் தொடரும்.

அடுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அரசின் செலவினம் அதிக அளவில் இருப்பது உறுதி செய்யப்படும். நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருவது தெளிவாகத் தெரிகிறது. ஆனால், அந்த வளா்ச்சி நீடிக்க வேண்டும். தற்போதைய இக்கட்டான சூழலில், தொழில் நிறுவனங்கள் முக்கியப் பங்களிப்பை வழங்க வேண்டும் என்றாா் நிா்மலா சீதாராமன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com