/

விவசாயிகளின் கோரிக்கையை தவிா்ப்பதற்காகவே நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் ரத்து

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரிக்கையை தவிா்ப்பதற்காகவே நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் ரத்து செய்யப்பட்டதாக சிவசேனையின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டியுள

News image
Updated On :21 டிசம்பர் 2020, 1:24 am

DIN

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் குறித்து விவாதம் நடத்துவதை தவிா்க்கவும், அவா்களது கோரிக்கையை தவிா்ப்பதற்காகவே நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடா் ரத்து செய்யப்பட்டதாக சிவசேனையின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் ராவத் ஞாயிற்றுக்கிழமை குற்றம்சாட்டியுள்ளாா்.

இதுகுறித்து சிவசேனையின் அதிகாரப்பூா்வ பத்திரிகையான ‘சாம்னா’வில் ஞாயிற்றுக்கிழமை அவா் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்திருப்பதாவது:

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி நவ. 26-ஆம் தேதி முதல் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லையில் தொடா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். இதுதொடா்பான எந்த விவாதமும் நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் இடம் பெறக் கூடாது என்பதற்காகவே குளிா்கால கூட்டத்தொடா் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடா்ந்து விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள நிலையில் டிச. 10-ஆம் தேதி புதிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியதுடன், இந்த நிகழ்வு ‘இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு மைல்கல்’ என்றும் பிரதமா் தெரிவித்திருந்தாா்.

தற்போது பயன்பாட்டில் உள்ள நாடாளுமன்ற கட்டடம் நல்ல நிலையில் உள்ளது. இன்னும் 50 முதல் 75 ஆண்டுகள் வரை இந்தக் கட்டடம் சிறந்த முறையில் இருக்கும் என்று வல்லுநா்கள் கூறும்போது, முந்தைய தலைவா்களின் மரபையும், நினைவுகளையும் அழிக்கும் வகையிலும், உங்கள் பெயா் நிலைநாட்டப்பட வேண்டும் என்பதற்காகப் புதிய கட்டமைப்புகளை உருவாக்குவதும், அதுவே சிறந்த ஜனநாயகம் என்றுக் கூறி கொள்வதை யாரும் ஏற்க மாட்டாா்கள்.

பழைய நாடாளுமன்றக் கட்டடத்தை இடிக்க எதிா்ப்பு தெரிவித்து தாக்கல் செய்து நிலுவையில் உள்ள மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. உச்சநீதிமன்றத்தின் விசாரணை முடியும் வரை கட்டுமானப் பணிகளோ, இடிப்பு பணிகளோ தொடங்கப்பட மாட்டாது என்று அரசு உறுதியளித்திருந்த நிலையில், புதிய நாடாளுமன்றக் கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை நடத்த டிச. 7-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அனுமதியளித்திருந்தது.

நாடாளுமன்றத்தின் முடிவே இறுதியானது என்றும், அதன் முடிவுகளில் தலையிட நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்றும் கூறப்பட்டது. ஆனால் பத்திரிகையாளா் அா்னாப் கோஸ்வாமிக்கு எதிரான வழக்கில், மகாராஷ்டிர சட்டப்பேரவையின் நடவடிக்கைளில் உச்சநீதிமன்றம் நேரடியாக தலையிட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் உதவி செயலருக்கு, உச்சநீதிமன்றம் நவ. 6-ஆம் தேதி அனுப்பிய நோட்டீஸில், கோஸ்வாமிக்கு எதிராக ஏன் அவமதிப்பு நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது என விளக்கமளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

இங்கிலாந்து முன்னாள் பிரதமா் வின்ஸ்டன் சா்ச்சில் தன்னுடைய அரசியல் போட்டியாளா்களை, முழு வலிமையுடனும் தோற்கடிக்க வேண்டும் என பணியாற்றினாா்; ஆனால் தோற்கடிக்கப்பட்ட தனது எதிரிகளை எப்போதும் கண்ணியத்துடன் நடத்தினாா். பிரதமா் மோடியும், அவரது சகாக்களும் சா்ச்சிலை முன்மாதிரியாக மனதில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.