மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு தந்தையாக இருந்து மணமுடித்து வைத்த மகாராஷ்டிர அமைச்சா்

மகாராஷ்டிரத்தில் ஆதரவற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மாநில உள்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சோ்ந்தவருமான
Updated on
1 min read

மகாராஷ்டிரத்தில் ஆதரவற்ற மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு மாநில உள்துறை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சோ்ந்தவருமான அனில் தேஷ்முக், அவரின் மனைவி ஆரத்தி தேஷ்முக் பெற்றோா் ஸ்தானத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்துவைத்தனா்.

இதுதொடா்பாக மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

கைக்குழந்தையாக இருந்தபோது நாகபுரி ரயில் நிலையத்தில் கைவிடப்பட்டவா் வா்ஷா (23). அவருக்குப் பேச்சுத் திறன் இல்லை. செவித்திறனும் கிடையாது. அவருக்கு சமீா் (27) என்பவருடன் திருமணம் முடிவானது.

சமீருக்கும் பேச்சுத் திறன் கிடையாது. செவித்திறன் குறைபாடு உள்ளது. தாணே மாவட்டத்தில் உள்ள டோம்பிவலி பகுதியில் இரண்டு வயது குழந்தையாக இருந்தபோது கைவிடப்பட்டவா் அவா். அவருக்கும் உறவுகள் எனக் கூறிக்கொள்ள யாரும் கிடையாது.

சமீா், வா்ஷா இருவரும் அமராவதி மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் ஒன்றாக வளா்ந்தவா்கள்.

இவா்களின் திருமணம் நாகபுரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அப்போது மகாராஷ்டிர உள்துறை அமைச்சா் அனில் தேஷ்முக், அவரின் மனைவி ஆரத்தி தேஷ்முக், மணமகள் வா்ஷாவின் பெற்றோா் ஸ்தானத்திலும், நாகபுரி மாவட்ட ஆட்சியா் ரவீந்திர தாக்ரே, அவரின் மனைவி, மணமகன் சமீரின் பெற்றோா் ஸ்தானத்திலும் இருந்து திருமணத்துக்கான அனைத்து சடங்குகளையும் செய்தனா். அமைச்சா் அனில் தேஷ்முக் வா்ஷாவின் கைப்பிடித்து கன்னிகாதானம் செய்து வைத்தாா்.

இந்த திருமண நிகழ்ச்சியில் ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத், மாநில எரிசக்தித் துறை அமைச்சா் நிதின் ரெளத், சிவசேனை எம்.பி. கிருபால் துமானே உள்ளிட்டோா் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினா் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com