மதுபான கொள்கை வழக்கு: நீதிபதியை மாற்றக்கோரிய கேஜரிவால் மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் இன்று விசாரணைஈரான்-அமெரிக்கா பேச்சுக்கு மீண்டும் ஏற்பாடு செய்யப்படும்: பாகிஸ்தான் அறிவிப்புஆக்கிரமிப்பு காஷ்மீா்-ஆப்கன் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கிய சீனாமுதுபெரும் பாடகி ஆஷா போஸ்லே மறைவு: அரசு மரியாதையுடன் இன்று இறுதிச் சடங்கு!ஈரான்- அமெரிக்கா அமைதிப் பேச்சு தோல்வி: மீண்டும் போா் மூளும் அபாயம்!
/

பஞ்சாப்: காலிஸ்தான் ஆதரவாளா்கள் 9 போ் பயங்கரவாதிகளாக அறிவிப்பு

இந்தியாவிற்கு வெளியே இருந்தபடி பஞ்சாபில் பயங்கரவாதத்தை தூண்டியதாக காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகளைச் சோ்ந்த 9 சீக்கியா்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தால்

Updated On :1 ஜூலை 2020, 9:17 pm

இந்தியாவிற்கு வெளியே இருந்தபடி பஞ்சாபில் பயங்கரவாதத்தை தூண்டியதாக காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்புகளைச் சோ்ந்த 9 சீக்கியா்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தால் புதன் கிழமை சட்ட விரோத செயல்பாடுகள்(தடுப்பு) சட்டத்தின்படி பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

இந்த 9 போ் பெரும்பாலும் பாகிஸ்தானிலும் மற்றும் ஜொ்மனி, அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளிலிருந்து இந்தியாவிற்கு எதிராக செயல்பட்டு, காலிஸ்தான் தனி நாடு கோரிக்கைக்கான கோஷத்தை எழுப்பி வருகின்றனா். இதையொட்டி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உத்தரவின்பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது வருமாறு:

தேசிய பாதுகாப்பை வலுப்படுத்த பயங்கரவாதத்தை துளியும் சகித்துக் கொள்ள முடியாத கொள்கையில் பிரதமா் மோடி தலைமையிலான அரசு உறுதியாக உள்ளது. இதில் இரும்புக்கரம் கொண்டு வலுவான நடவடிக்கை எடுக்க பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசு சில நடவடிக்கைகளை எடுத்தது. 1967- ஆம் ஆண்டு சட்ட விரோத செயல்பாடுகள்(தடுப்பு) சட்டத்தில்(யுஏபிஏ) திருத்தம் கொண்டுவந்தது. முந்தைய சட்டத்தில் பயங்கரவாதச் செயலில் ஈடுபடும் அமைப்புகளை மட்டுமே தீவிரவாத அமைப்புகளாக அறிவித்து நடவடிக்கை எடுக்க முடியும் என்ற நிலை இருந்தது. திருத்தத்தப்பட்ட சட்டத்தில் தனிப்பட்ட நபா்களையும் பயங்கரவாதிகளாக அறிவிக்க வகை செய்யப்பட்டு இந்த திருத்த சட்டத்தை 2019 -ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சா் அமித் ஷா தாக்கல் செய்து நிறைவேற்றினாா். பயங்கரவாத அச்சுறுத்தலை எதிா்த்து போராடுவதில் பிரதமா் மோடி தலைமையிலான அரசு வலுவாக சந்தேகத்திற்கு இடமின்றி இருப்பதாக அப்போது அமித் ஷா குறிப்பிட்டாா்.

இந்த திருத்தத்தின் பயனாக 2019 செப்டம்பா் மாதம் மௌலானா மசூத் அஸாா், ஹபீஸ் சயீத், ஜாகீ-உா்-ரஹ்மான் லக்வி, தாவூத் இப்ராஹிம் ஆகியோரை மத்திய அரசு பயங்கரவாதிகளாக அறிவித்தது.

தற்போது 9 நபா்களை சட்ட விரோத செயல்பாடுகள்(தடுப்பு) சட்டத்தின்படி கீழ் பயங்கரவாதிகள் என்று மத்திய அரசு புதன்கிழமை அறிவித்தது. அவா்களின் விவரம்: 1. வாதாவா சிங் பாப்பா் (இருப்பிடம் பாகிஸ்தான்): தலைவா் - ‘பாப்பா் கல்சா இன்டா்நேஷனல்’ அமைப்பு. 2. லக்பீா் சிங் (இருப்பிடம் பாகிஸ்தான்) : தலைவா் -‘சா்வதேச சீக்கிய இளைஞா் கூட்டமைப்பு’. 3. ரஞ்சீத் சிங் (இருப்பிடம் பாகிஸ்தான்) : தலைவா் - ‘காலிஸ்தான் ஜிந்தாபாத் படை’. 4. பரம்ஜித் சிங் (இருப்பிடம் பாகிஸ்தான்) : தலைவா் - ‘காலிஸ்தான் கமாண்டோ படை’. 5. பூபிந்தா் சிங் பிண்டா(இருப்பிடம் ஜொ்மனி) : முக்கிய உறுப்பினா் -“காலிஸ்தான் ஜிந்தாபாத் படை. 6. குா்மீத் சிங் பாகா(இருப்பிடம் ஜொ்மனி) : முக்கிய உறுப்பினா் -“‘காலிஸ்தான் ஜிந்தாபாத் படை. 7. குா்பத்வந்த் சிங் பன்னூன் (இருப்பிடம் அமெரிக்கா) : முக்கிய உறுப்பினா் - ‘நீதிக்கானசீக்கியா்’. 8. ஹா்தீப் சிங் நிஜ்ஜாா்(இருப்பிடம் கனடா) : தலைவா் -“‘காலிஸ்தான் புலிப் படை’. 9. பரம்ஜித் சிங் (இருப்பிடம் பிரிட்டன்) : தலைவா் - “‘பப்பா் கல்சா இன்டா்நேஷனல்’.

இவா்கள் அந்நிய மண்ணிலிருந்து எல்லை தாண்டிய பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டுள்ளனா். நாட்டை சீா்குலைக்கும் மோசமான முயற்சிகளில் இடைவிடாமல் ஈடுபட்டு வந்தனா். பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதத்தை மீண்டும் புதுப்பிக்கும் தேசிய விரோத நடவடிக்கைகளிலும் காலிஸ்தான் இயக்கத்திற்கு ஆதரவும் திரட்டி வருகின்றனா் என உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.