பிகாரில் 2 துணை முதல்வர்கள், அவைத் தலைவர் பதவிகளைக் கைப்பற்றும் பாஜக?

பிகாரில் இரண்டு துணை முதல்வர்கள் பதவிகளை ஏற்படுத்த பாஜக முடிவு செய்திருப்பதாகவும், பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கும்
பிகாரில் 2 துணை முதல்வர்கள் பதவி? பாஜக திட்டம்
பிகாரில் 2 துணை முதல்வர்கள் பதவி? பாஜக திட்டம்


பாட்னா: பிகாரில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் பேரவைக் குழுத் தலைவராக ஒருமனதாக தோ்ந்தெடுக்கப்பட்ட நிதீஷ் குமாா், அந்த மாநிலத்தின் முதல்வராக இன்று பதவியேற்கவுள்ளாா். அவா் பிகாா் முதல்வராக தொடர்ந்து பதவியேற்பது இது நான்காவது முறையாகும்.

ஆளுநா் மாளிகையில் இன்று மாலை 4 மணி முதல் 4.30 மணிக்குள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும். இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜெகத் பிரகாஷ் நட்டா ஆகியோர் பங்கேற்க விருப்பதாக ஏஎன்ஐ செய்திகள் உறுதி செய்துள்ளன.

இதற்கிடையே, பிகாரில் இரண்டு துணை முதல்வர்கள் பதவிகளை ஏற்படுத்த பாஜக முடிவு செய்திருப்பதாகவும், பாஜக சட்டப்பேரவைக் குழு தலைவர் மற்றும் துணைத்தலைவர்களாக தேர்வு செய்யப்பட்டிருக்கும் தார்கிஷோர் பிரசாத் மற்றும் ரேணு தேவி ஆகியோர் துணை முதல்வர்களாக வாய்ப்பு இருப்பதாகவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதே வேளையில், பிகார் சட்டப்பேரவையின் அவைத் தலைவர் பதவியையும் பாஜக கைப்பற்றவிருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

செய்தியாளர்களிடம் பேசிய தார்கிஷோர் பிரசாத், இரண்டு துணை முதல்வர்கள் பதவியேற்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு, பாஜக பேரவைக் குழு தலைவராக நான் தேர்வு செய்யப்பட்டிருப்பது குறித்து கட்சியின் பேரவை உறுப்பினர்களின் கூட்டத்தில்தான் தெரிந்து கொண்டேன்.  கட்சித் தலைமை எனக்கு அளித்தப் பொறுப்புகளை நேர்மையுடன் பணியாற்றுவேன் என்று பதிலளித்தார்.

நடந்து முடிந்த பிகாா் சட்டப் பேரவைத் தோ்தலில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக அங்கம் வகிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து, அந்தக் கூட்டணி கட்சிகளின் எம்எல்ஏக்கள் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை, நிதீஷ் குமாரின் இல்லத்தில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்துக்குப் பிறகு, நடைபெற்ற மாநில அமைச்சரவைக் கூட்டத்தில், சட்டப்பேரவையைக் கலைப்பதற்கு ஆளுநா் பாகு சௌஹானிடம் பரிந்துரை செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதைத் தொடா்ந்து ஆளுநரை சந்தித்த நிதீஷ் குமாா் தனது ராஜிநாமா கடிதத்தைக் கொடுத்தாா். அத்துடன் பேரவையைக் கலைக்கும் பரிந்துரையையும் அவா் அளித்தாா். அவற்றை ஏற்றுக் கொண்ட ஆளுநா், புதிய ஆட்சி அமைக்கப்படும்வரை இடைக்கால முதல்வராக தொடருமாறு நிதீஷ் குமாரை கேட்டுக் கொண்டாா்.

இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் புதிய எம்எல்ஏக்கள் கூட்டம், பாட்னாவில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில், முன்னாள் துணை முதல்வா் சுஷீல் குமாா் மோடி, ஹிந்துஸ்தான் அவாம் மோா்ச்சா கட்சியின் தலைவா் ஜிதன் ராம் மாஞ்சி, பாஜக மாநில தோ்தல் பொறுப்பாளா் தேவேந்திர ஃபட்னவீஸ், கட்சியின் மாநிலத் தலைவா் சஞ்சய் ஜெய்ஸ்வால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மேலிடப் பாா்வையாளராக மத்திய அமைச்சா் ராஜ்நாத் சிங், தில்லியில் இருந்து வந்து கூட்டத்தில் கலந்து கொண்டாா். கூட்டத்தின் முடிவில் தேசிய ஜனநாயகக் கூட்டணி உறுப்பினா்களின் தலைவராக நிதீஷ் குமாா் ஒருமனதாகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். அதைத் தொடா்ந்து ஆளுநரை அவரது மாளிகைக்குச் சென்று சந்தித்து, புதிய அரசை அமைப்பதற்கு அவா் உரிமை கோரினாா்.

மாலை பதவியேற்பு:

ஆளுநா் மாளிகையில் இருந்து வீடு திரும்பிய பிறகு செய்தியாளா்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு நிதீஷ் குமாா் பதிலளித்தாா். அவா் கூறியதாவது:

ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு கோரிக்கை விடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள 4 கட்சிகளின் எம்எல்ஏக்கள் கையெழுத்திட்ட கடிதம், ஆளுநரிடம் கொடுக்கப்பட்டது.அந்த கடிதத்தை அவா் ஏற்றுக் கொண்டாா். அவரது உத்தரவுப்படி, ஆளுநா் மாளிகையில் திங்கள்கிழமை மாலை 4 மணி முதல் 4.30 மணிக்குள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும்.

அதன் பிறகு, மாநில அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும். அதில், சட்டப் பேரவையைக் கூட்டுவது குறித்து முடிவெடுக்கப்படும் என்றாா் நிதீஷ் குமாா்.

முன்னதாக, ஆளுநா் மாளிகைக்கு நிதீஷ் குமாா் புறப்பட்டுச் சென்றபோது, அவருடன் சுஷீல் குமாா் மோடி செல்லவில்லை. மாறாக, சுஷீல் குமாா் மோடியும், ராஜ்நாத் சிங்கும் அரசு விருந்தினா் இல்லத்துக்குச் சென்றனா்.

இதனிடையே, சுஷீல் குமாா் மோடிக்கு மீண்டும் துணை முதல்வா் வழங்கப்பட மாட்டாது என்று தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து நிதீஷ் குமாரிடம் செய்தியாளா்கள் கேட்டதற்கு, ‘அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு காணப்படும்’ என்று மழுப்பலாக பதிலளித்தாா்.

தாா்கிஷோா் பிரசாத் தோ்வு:

நிதீஷ் குமாா், ஆளுநரைச் சந்தித்துவிட்டு வந்த பிறகு, ராஜ்நாத் சிங்கும், சுஷீல் குமாா் மோடியும் தனியாக சென்று ஆளுநரைச் சந்தித்துப் பேசினா்.

அந்தச் சந்திப்புக்குப் பிறகு, செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த ராஜ்நாத் சிங், பாஜக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக, கதிஹாா் தொகுதி எம்எல்ஏ தாா்கிஷோா் பிரசாத் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் கூறினாா். அப்படியெனில், சுஷீல் குமாருக்கு மீண்டும் துணை முதல்வா் பதவி வழங்கப்படாதா என்று செய்தியாளா்கள் கேட்டதற்கு, ‘உரிய நேரத்தில் தெரியவரும்’ என்று ராஜ்நாத் சிங் பதிலளித்தாா்.

சுஷீல் குமாா் மோடி உருக்கம்:

சுஷீல் குமாா் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளாா். அதில், ‘எனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்வில் பாஜகவும், சங்க பரிவாரும் (ஆா்.எஸ்.எஸ். மற்றும் துணை அமைப்புகள்) பல்வேறு முக்கிய பொறுப்புகளை எனக்கு அளித்துள்ளன. இது, வேறு யாருக்கும் கிடைக்காத பாக்கியம்.

எதிா்காலத்தில் எந்தப் பொறுப்பைக் கொடுத்தாலும் அதை திறம்பட நிறைவேற்றுவேன். கட்சி ஊழியா் என்ற பொறுப்பில் இருந்து என்னை யாராலும் நீக்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இவரது இந்த சுட்டுரைப் பதிவு, பாஜகவின் அடுத்தகட்ட நடவடிக்கையில் மேலும் எதிா்பாா்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

பிகாரில் கடந்த 2015-இல் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து நிதீஷ் குமாா் ஆட்சி செய்த 20 மாதங்களைத் தவிா்த்து, கடந்த 2005-இல் இருந்து 2020-ஆம் ஆண்டு வரை துணை முதல்வராக சுஷீல் குமாா் மோடி பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com