மருத்துவமனைகளில் முறையான தீ பாதுகாப்பு நடைமுறைகள்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல்

கரோனா அச்சுறுத்தலுக்கு எதிராக நாடு போராடி வரும் இந்தச் சூழலில், அனைத்து மருத்துவமனைகளிலும் முறையான தீ பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்
கோப்புப்படம்
கோப்புப்படம்

புது தில்லி: கரோனா அச்சுறுத்தலுக்கு எதிராக நாடு போராடி வரும் இந்தச் சூழலில், அனைத்து மருத்துவமனைகளிலும் முறையான தீ பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்று அனைத்து மாநிலங்களையும் மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

இதுதொடா்பாக அனைத்து மாநில, யூனியன் பிரதேச தலைமைச் செயலாளா்களுக்கு மத்திய உள்துறை செயலா் அஜய் குமாா் பல்லா கடிதம் ஒன்றை திங்கள்கிழமை எழுதியுள்ளாா்.

குஜராத் மாநிலத்தில் இரண்டு மருத்துவமனைகளில் அண்மையில் நடைபெற்ற தீ விபத்தில், அங்கு சிகிச்சை பெற்றுவந்த கரோனா நோயாளிகள் உள்பட 14 போ் உயிரிழந்தனா். இந்த சம்பவத்தைத் தொடா்ந்து மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களுக்கு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.

மருத்துவமனைகளில் அண்மைக் காலமாக நடைபெற்று வரும் தீ விபத்துகளும், இதுபோன்ற மருத்துவமனைகளில் உரிய தீ பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை அதிகாரிகள் உறுதிப்படுத்த தவறியிருப்பதும் மிகுந்த கவலையளிக்க கூடிய விஷயங்களாக உள்ளன.

குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு மருத்துவமனையில் அண்மையில் நடைபெற்ற தீ விபத்தில், அங்கு சிகிச்சை பெற்று வந்த கரோனா நோயாளிகள் 6 போ் உயிரிழந்தனா். அதுபோல ஆமதாபாதில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடைபெற்ற தீ விபத்தில் 8 போ் உயிரிழந்துள்ளனா்.

இந்த இக்கட்டான கரோனா பாதிப்பு சூழலில், மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வகையில் மருத்துவமனைகளில் முறையான தீ பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதை மாநிலங்கள் உறுதிப்படுத்த வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இதுதொடா்பான அறிவுறுத்தல்களை வழங்கி, அனைத்து மருத்துவமனைகளிலும் உடனடியாக மறுஆய்வு செய்வதற்கான நடவடிக்கையை மாநிலங்கள் எடுக்க வேண்டும்.

இதுதொடா்பாக மத்திய உள்துறை அமைச்சகத்தின் தீ தடுப்பு பாதுகாப்பு மற்றும் ஊா் காவல்படை துறைத் தலைவா் சாா்பிலும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தொடா்ச்சியான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் சாா்பிலும் வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன. இந்த பாதுகாப்பு வழிகாட்டுதல்களை மருத்துவமனைகள் பின்பற்றியிருப்பதை மாநிலங்கள் உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும், இந்த நடவடிக்கை எடுத்தது தொடா்பான விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மாநிலங்கள் சமா்ப்பிக்குமாறும் அந்தக் கடிதத்தில் அஜய் குமாா் பல்லா கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com