நிர்பயா வழக்கு: தில்லி உயர் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு

நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தனித்தனியாக தூக்கிலிட அனுமதிக்க முடியாது என்ற தில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்


நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தனித்தனியாக தூக்கிலிட அனுமதிக்க முடியாது என்ற தில்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மத்திய, மாநில அரசுகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன.

நிர்பயா வழக்கு குற்றவாளிகள் நான்கு பேரின் தூக்குத் தண்டனையை விசாரணை நீதிமன்றம் நிறுத்திவைத்துள்ளதை எதிர்த்து தில்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு மீது விசாரணை நடத்திய தில்லி உயர் நீதிமன்றம் இன்று (புதன்கிழமை) தீர்ப்பு வழங்கியது. அதில், குற்றவாளிகள் நால்வரையும் தனித்தனியாக தூக்கிலிட அனுமதிக்க முடியாது என தெரிவித்தது. மேலும், இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தாக்கல் செய்த மனுக்களையும் தள்ளுபடி செய்தது. 

இந்நிலையில் இந்தத் தீர்ப்பு வழங்கிய சில மணி நேரத்திலேயே, மத்திய அரசு மற்றும் தில்லி அரசு இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளன.

முன்னதாக தில்லி உயர் நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, "நிர்பயா குற்றவாளிகள் சட்டத்தை விளையாட்டாக எடுத்துக்கொண்டுள்ளனர். தாங்கள் தூக்கிலிடப்படுவதை தவிர்ப்பதற்கான அனைத்து தந்திர வேலைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். கொடூர குற்றங்களில் ஈடுபட்டு தண்டனை பெற்ற குற்றவாளிகள், நாட்டு மக்களின் பொறுமையை சோதித்து வருகின்றனர். நான்கு குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா மறுசீராய்வு மனுவோ அல்லது கருணை மனுவோ இன்னும் தாக்கல் செய்யாதது திட்டமிட்ட சதிச் செயலாகும்' என்று வாதிட்டார்.

குற்றவாளிகள் அக்ஷய் சிங், வினய் சர்மா, பவன் குப்தா ஆகியோர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ஏ.பி.சிங், மத்திய அரசின் வாதத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

நான்காவது குற்றவாளியான முகேஷ் குமார் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் ரெபெக்கா ஜான், நீதிமன்றத்தின் தடை உத்தரவுக்கு எடுத்த எடுப்பிலேயே ஆட்சேபம் தெரிவிப்பது சரியல்ல என்று வாதாடினார்.

"இந்த வழக்கில் மத்திய அரசுக்கு நேரடித் தொடர்பில்லை. தூக்குத் தண்டனை கால தாமதமாகிறது என்பதாலேயே இப்போது விழித்துக்கொண்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்தான் தூக்குத் தண்டனைக்கான உத்தரவை விரைவில் வெளியிட வேண்டும் என்று விசாரணை நீதிமன்றத்தில் மனு கொடுத்தனர். இந்த விஷயத்தில் மத்திய அரசோ, மாநில அரசோ விசாரணை நீதிமன்றத்தை அணுகவில்லை' என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற நான்கு பேரில் ஒருவர் நீதிமன்றத்தை நாடியுள்ள நிலையில் மற்றவர்களை தூக்கிலிடமுடியுமா என்று விளக்கம் கேட்டுத்தான் மத்திய அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளது. அந்த வழக்கு நிலுவையில் உள்ளது என்றும் ரெபெக்கா ஜான் சுட்டிக்காட்டினார்.

கடந்த 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 16-ஆம் தேதி தில்லியில் ஓடும் பேருந்தில் துணை மருத்துவ மாணவி (நிர்பயா) கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். பின்னர் அவர் சிங்கப்பூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

குற்றவாளிகள் 6 பேரில் ஒருவரான ராம்சிங், விசாரணையின்போது திகார் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவத்தில் தொடர்புடைய சிறுவன், சீர்த்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்பட்டு, 3 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார். அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் என்பதால் அவர் பெயர் குறிப்பிடாத இடத்துக்கு பாதுகாப்பாக அனுப்பிவைக்கப்பட்டார்.

இதர நான்கு பேருக்கும் தூக்குத் தண்டனை விதித்து விசாரணை நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. பின்னர் 2017-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் அந்த நால்வரின் தூக்குத் தண்டனையை உறுதிசெய்து உத்தரவிட்டது.

நால்வரின் தூக்குத் தண்டனையையும் நிறைவேற்றுவதற்கான தேதிகள் இருமுறை அறிவிக்கப்பட்டு, தற்போது அவர்களது தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com