லடாக் மோதலில் 76 இந்திய வீரர்கள் காயம்: இந்திய ராணுவம்

இந்திய - சீன ராணுவ வீரா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 76 இந்திய வீரர்கள் காயமடைந்ததாகவும், அனைவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.
லடாக் மோதலில் 76 இந்திய வீரர்கள் காயம்: இந்திய ராணுவம்

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு இந்திய - சீன ராணுவ வீரா்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 76 இந்திய வீரர்கள் காயமடைந்ததாகவும், அனைவரின் உடல்நிலையும் சீராக இருப்பதாகவும் இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது.

லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்தினரிடையே நடந்த மோதலில் இந்திய ராணுவத்தின் மூத்த ராணுவ அதிகாரி உள்பட 20 போ் வீரமரணம் அடைந்தனா். 

கிழக்கு லடாக்கின் பாங்காங் ஏரி, கல்வான் பள்ளத்தாக்கு, டெம்சோக், தௌலத் பெக் ஓல்டி உள்ளிட்ட எல்லைப் பகுதிகளில் இந்திய-சீன ராணுவப் படைகளிடையே கடந்த 5 வாரங்களுக்கு மேலாக மோதல்போக்கு நீடித்து வந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில் இருநாட்டுப் படைகளுக்கும் இடையே கடும் மோதல் நேரிட்டது.

இந்த மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 18 ராணுவ வீரர்கள் காயமடைந்ததாக முதல்கட்ட செய்திகள் வெளியாகின.

ஆனால், கிழக்கு லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் 76 இந்திய ராணுவ வீரர்கள் காயமடைந்ததாகவும், அவர்கள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும், அனைவரது உடல்நிலையும் சீராக இருப்பதாகவும் இந்திய ராணுவம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

இவர்களில் 18 ராணுவ வீரர்கள் லேஹ் பகுதியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் 15 நாள்களுக்கு பணியில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள். 58 ராணுவ வீரர்கள் இதர மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்னும் சில வாரங்களில் பணிக்குத் திரும்புவார்கள் என்று இந்திய ராணுவம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 50 ஆண்டுகளில் இந்திய - சீன ராணுவத்துக்கு இடையே இதுவரை மிகப்பெரிய மோதல் எதுவும் நேரிடாத நிலையில், கடந்த திங்கள்கிழமை நடந்த மோதலில் இந்திய ராணுவ உயர் அதிகாரி உள்பட 20 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அதே சமயம், சீன தரப்பில் 40க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகக் கூறப்பட்டாலும், அதை சீன ராணுவம் உறுதி செய்யவில்லை.

அதே சமயம், இந்திய ராணுவத்தினரை இரும்புக் கம்பி மற்றும் கற்களைக் கொண்டு சீன ராணுவம் தாக்கியதாகக் கூறப்பட்ட நிலையில், சம்பவம் நடந்த இடத்தில் ஆணிகள் பொருத்திய இரும்புக் கம்பிகள் கண்டெடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வேகமாகப் பரவி வருகிறது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com