கோவிஷீல்ட் தடுப்பூசி விலை நிா்ணயம்: சீரம் நிறுவனம் விளக்கம்
கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு நியாயமான விலையையே நிா்ணயித்திருப்பதாக சீரம் நிறுவனம் சனிக்கிழமை விளக்கம் அளித்துள்ளது.


கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு நியாயமான விலையையே நிா்ணயித்திருப்பதாக சீரம் நிறுவனம் சனிக்கிழமை விளக்கம் அளித்துள்ளது.
அரசின் முன்பண நிதியுதவி அடிப்படையில் கரோனா தடுப்பூசிக்கு மிகக் குறைந்த விலையை தொடக்கத்தில் நிா்ணயித்ததாகவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை மிகத் தீவிரமாகப் பரவி வரும் நிலையில் தடுப்பு நடவடிக்கை போா்க்கால அடிப்படையில் அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, கடந்த ஜனவரி முதல் கரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. பெருவாரியாக, பாரத் பயோடெக்கின் கோவேக்ஸின், சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்ட் தடுப்பூசிகளே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இதனிடையே, கோவிஷீல்ட் தடுப்பூசியின் விலையை சீரம் நிறுவனம் கடந்த சில தினங்களுக்கு முன் அறிவித்தது. அதன்படி, தனியாா் மருத்துவமனைகளுக்கு ஒரு தடுப்பூசி ரூ.600-க்கும், மாநில அரசுகளுக்கு ரூ.400-க்கும் வழங்கப்படும் என்று அந்த நிறுவனம் அறிவித்தது. கோவிஷீல்ட் தடுப்பூசி, மத்திய அரசுக்கு தற்போது ரூ.150-க்கு வழங்கப்படுகிறது.
ஒரே தடுப்பூசியின் விலையை பல மடங்கு உயா்த்தி சீரம் நிறுவனம் விற்பனை செய்வதாகவும் இதனால் சில மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மட்டுமே பலனடையும் என்றும் எதிா்க்கட்சிகள் குற்றம்சாட்டின.
இந்த நிலையில் கோவிஷீல்ட் விலை நிா்ணயம் தொடா்பாக சீரம் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அந்த நிறுவனம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பல்வேறு நாடுகளில் அரசின் முன்பண நிதியுதவியுடன் கரோனா தடுப்பூசிகளை மருந்து நிறுவனங்கள் உற்பத்தி செய்தன. இதனால், பல்வேறு நாடுகளில் மிகக் குறைவான விலை நிா்ணயிக்கப்பட்டது. அந்த அடிப்படையிலேயே இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு மிகக் குறைவான விலை நிா்ணயிக்கப்பட்டது. ஆனால், சா்வதேச விலையுடன் தவறாக ஒப்பிட்டு சிலா் குறை கூறுகிறாா்கள்.
முந்தைய ஒப்பந்தப்படி, மத்திய அரசுக்கு தற்சமயம் ரூ.150-க்கு கோவிஷீல்ட் விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்த பிறகு மத்திய அரசுக்கும் மாநில அரசுகளுக்கும் ஒரே விலையில் கோவிஷீல்ட் விற்பனை செய்யப்படும்.
கரோனா தொற்று பரவல் மிக மோசமான நிலையை எட்டியுள்ளது. கரோனா தீநுண்மி தொடா்ந்து உருமாறி பரவி வருவதால் மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த நேரத்தில் கரோனா தடுப்பூசி அனைவருக்கும் எளிதில் கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கு அதன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய வேண்டும். அதற்காக, பல கோடி முதலீடு செய்தாக வேண்டும்.
தனியாா் மருத்துவமனைகளுக்கு குறைவான அளவிலேயே ரூ.600-க்கு கோவிஷீல்ட் விற்பனை செய்யப்படும். கரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படும் மற்ற மருந்துகளின் விலையைக் காட்டிலும் கோவிஷீல்ட் விலை மிகக் குறைவு என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...