கோவாக்சின்-கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து பயன்படுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா?

கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக நாட்டில் புழக்கத்தில் இருக்கும் கோவாக்சினுடன் கோவிஷீல்டின் முதல் தவணை மருந்தை கலந்துபோடுவது பாதுகாப்பானது மட்டுமல்லாமல், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்
கோவாக்சின்-கோவிஷீல்டு தடுப்பூசியை கலந்து பயன்படுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்குமா?


புதுதில்லி: கரோனா நோய்த்தொற்றுக்கு எதிராக நாட்டில் புழக்கத்தில் இருக்கும் கோவாக்சினுடன் கோவிஷீல்டின் முதல் தவணை மருந்தை கலந்துபோடுவது பாதுகாப்பானது மட்டுமல்லாமல், சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான தடுப்பூசி திட்டம் ஜனவரி 16 முதல் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசியும், ஆக்ஸ்போர்ட் பல்கலை, அஸ்ட்ராஜெனிகா நிறுவனம் மற்றும் சீரம் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியும் மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 50 கோடி பேருக்கு மேல் செலுத்தப்பட்டுள்ளது. 

நாட்டில் மூன்றில் இரண்டு பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஆனால், ஒருவருக்கு முதல் தவணையாக கோவாக்சின் போடப்பட்டால், இரண்டாவது தவணையும் கோவாக்சின் தான் போடப்பட வேண்டும் என ஐசிஎம்ஆர் தெரிவித்திருந்தது. 

இதையடுத்து தடுப்பூசி போட வரும் மக்களுக்கு அவர்களுக்கு போடப்படும் தடுப்பூசியின் அட்டை, இணையதளத்தில் பதிவு செய்தல் ஆகியவற்றில் என்ன மாதிரியான தடுப்பூசி போடப்படுகிறது என குறிப்பிடப்படுகிறது. 

ஆரம்பத்தில் இரண்டு வரை தடுப்பூசிகளுக்கும் முதல் தவணைக்கும் இரண்டாம் தவணைக்கும் நான்கு வார இடைவெளியை அடுத்து இரண்டாவது தவணை தடுப்பூசி போடப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதனிடையே கோவிஷீல்டின் முதல் தவணை தடுப்பூசிக்கும்  இரண்டாவது தவணைக்கும் 6-8 வாரங்கள் இடைவெளியில் போடப்பட வேண்டும் என்றும் பின்னர் 12 வாரங்களாகவும் அதிகரிக்கப்பட்டது. 

இந்தநிலையில் உத்தரபிரதேசத்தில் ஒரு பிரிவினர் முதல் தவணை தடுப்பூசியாக கோவிஷீல்டையும், கவனக்குறைவாக இரண்டாவது தவணையாக கோவக்ஸின் தடுப்பூசியையும் ஆறு வார இடைவெளியில் போட்டுள்ளனர். 

இதனைத்தொடர்ந்து இரு வேறு தடுப்பூசிகளை கலந்து போடப்பட்டால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்குமா என்று பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. ஐசிஎம்ஆர் நிறுவனமும் இந்த ஆய்வை நடத்தியது.  இந்த ஆய்வு கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே உத்தரபிரதேசத்தில் நடத்தப்பட்டது. 

அதாவது ஒருவர் முதல் தவணையாக கோவாக்சின் தடுப்பூசியும், இரண்டாவது தவணையாக கோவிஷீல்டு தடுப்பூசியும் எடுத்துக்கொண்டால், ஏதேனும் பக்கவிளைவுகள், உடல் உறுப்பு பாதிப்புகள் ஏற்படுமா என ஆய்வுகள் நடத்தப்பட்டன. 

ஐசிஎம்ஆரின் ஆய்வின் முடிவில், இரு வேறு தடுப்பூசிகளை கலந்து பயன்படுத்திக்கொண்டால் உடலில் கரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும் என தெரியவந்துள்ளது.

அடினோவைரஸை அடிப்படையாக கொண்ட கோவிஷீல்டு தடுப்பூசியை முதல் தவணையாகவும், செயலிழக்க வைக்கப்பட்ட வைரஸ் மூலம் தயாரிக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசியை இரண்டாவது தவணையாகவும் போட்டுக்கொள்வதால், பாதுகாப்பானது மட்டுமல்லாமல், ஆல்பா, பீட்டா மற்றும் டெல்டா வகை மாறுபட்ட கரோனா வைரஸ்களுக்கு எதிராகவும், சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியையும் கொடுக்கிறது என்று ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது. 

"இத்தகைய கலப்பு விதிமுறைகளின் படி தடுப்பூசி செலுத்தப்பட்டால் குறிப்பிட்ட தடுப்பூசிகளின் பற்றாக்குறை சமாளிக்கவும், மக்கள் மனதில் உள்ள தடுப்பூசிகள் குறித்த தயக்கத்தை போக்குவதற்கு உதவியாக இருக்கும்" என்று ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com