தேர்வுத் தாள்களில் பாஜக - திரிணமூல் கட்சிகளின் வினா - விடை விளையாட்டு
பொதுத் தேர்வுகளில், இவ்விரு கட்சிகளையும் சாடும் வகையில் வினாக்கள் அமைந்திருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


கொல்கத்தா: பாரதிய ஜனதா - திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே பெரும் அரசியல் யுத்தம் நடைபெற்றுவரும் நிலையில், இதன் பகுதியாக, பொதுத் தேர்வுகளில், இவ்விரு கட்சிகளையும் சாடும் வகையில் வினாக்கள் அமைந்திருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல் என்றாலே ஒரு கட்சியை மற்றொரு கட்சி இழித்துப் பேசுவதும், தலைவர்களை தாக்கிப் பேசுவதும் வழக்கம்தான். ஆனால், அதற்காக இப்படியா? என்று கேட்கும் அளவுக்கு இருக்கிறது பாஜக - திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளின் நடவடிக்கை.
இவ்விரு கட்சிகளும், தங்களது தாக்குதல் விளையாட்டை அரசியலோடு வைத்துக் கொள்ளாமல், மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும்போதுதான் அதிருப்தி ஏற்படுகிறது. இந்த வினா யுத்தத்தைத் தொடங்கிவைத்தது என்னவோ பாஜகதான்.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி, ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடத்திய மத்திய ஆயுதப் படைக் காவலர் தேர்வில், மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்ற பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இது ஏதோ சாதாரண கேள்வி என்று பதில் எழுதிவிட்டுப் போனவர்களும் சரி, கேள்விக்குப் பின்னால் இருக்கும் அரசியலைப் புரிந்துகொண்டவர்களும் சரி, அடுத்தகட்ட அரசியல் நகர்வை நிச்சயம் கவனித்திருப்பார்கள்.
மேலும் படிக்க: இதைச் செய்யாமல் விட்டால் குழந்தையின் ஆதார் செல்லாததாகிவிடும்
இந்தக் கேள்வியால், மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி கொந்தளித்தது. முதல்வர் மம்தா பானர்ஜி, நேரடியாக மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைச் சாடினார். பாஜக ஆதரவு கேள்விகளை யுபிஎஸ்சி கேட்கத் தொடங்கிவிட்டது. யுபிஎஸ்சி என்பது தன்னாட்சி அமைப்பு அல்லவா? ஆனால், அந்த அமைப்புக்குள்ளும் நுழைந்து, பாஜக சில கேள்விகளைக் கொடுத்து கேட்க வைக்கிறது என்று கூறியிருந்தார்.
யுபிஎஸ்சி நடத்திய தேர்வின்போது, விவசாயிகளின் போராட்டம் அரசியல் ரீதியாக தூண்டிவிடப்பட்டது போன்ற கேள்வியும் இடம்பெற்றிருந்தது. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இதோடு நின்று விடுமா என்ன? மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையை வம்புக்கிழுத்த பாஜகவுக்கு பதிலடி கொடுக்க மேற்கு வங்க அரசும் தயாராகிவிட்டது.
கடந்த ஞாயிறன்று நடைபெற்ற மேற்கு வங்க மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய மாநில அளவிலான தேர்வில், பிரிட்டிஷ் ஆட்சியில் எந்த சுதந்திரப் போராட்டத் தியாகி, சிறையில் இருந்தபோது மன்னிப்புக் கடிதம் எழுதினார்? என்ற கேள்வியை எழுப்பியிருந்தது. இதற்குப் பதில் விநாயக் தாமோதர் சாவர்க்கர். பாஜகவின் மூத்த தலைவர்களில் முக்கியமானவர் விநாயக் தாமோதர் சாவர்க்கர்.
ஒரு கேள்வியோடு விட்டுவிடுமா மம்தா தலைமையிலான அரசு? தேசிய குடிமக்கள் பதிவேடு, டூல்கிட் எனத் தேசிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்திய மத்திய அரசின் இரண்டு விவகாரங்களைத் தேர்வில் வினாக்களாக எழுப்பி தனது பங்குக்கு வம்பிழுத்தது.
சாவர்க்கர் பற்றிய கேள்வியால் பாஜகவினர் கொதித்துப் போயுள்ளனர். இதற்கு மேற்கு வங்க அரசுக்குக் கண்டனத்தையும் பதிவு செய்தனர். ஆனால், மேற்கு வங்க அரசோ, இதில் தனிப்பட்ட அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சி எதுவுமில்லை. வரலாற்றில் நிகழ்ந்ததுதான் கேள்வியாகக் கேட்கப்பட்டுள்ளது என்று அலட்டிக்கொள்ளாமல் பதிலளித்துள்ளது.
மேற்கு வங்க மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வினாதான் அன்றைய தினம் சமூக வலைத்தளங்களில் விறுவிறுப்பாகப் பரவியது. மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிந்தைய வன்முறையை பாஜக அரசு யுபிஎஸ்சி மூலம் கிளப்பியதால், அதற்குப் பதிலடி கொடுக்கவே சாவர்க்கர் பற்றிய கேள்வி மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வில் இடம்பெற்றிருந்ததாக மக்கள் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
ஆனால், திரிணமூல் காங்கிரஸ் கட்சியோ, மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையம், தன்னாட்சி பெற்ற அமைப்பு. அதற்கும் கட்சிக்கோ அல்லது அரசுக்கோ எந்த தொடர்பும் இல்லை. சுதந்திரமாகவே வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

கட்சிகளுக்குள் ஏற்படும் மோதலை இவ்வாறு முக்கியமான தேர்வுகளில் வெளிப்படுத்துவது நல்லதல்ல என்று கூறப்பட்டாலும், இது ஒன்றும் புதிதல்ல, ஏற்கெனவே பல ஆட்சிகளின்போதும் இவ்வாறு அரசியல் காழ்ப்புணர்வின் வெளிப்பாடாக சில கேள்விகள் இடம்பெற்றிருக்கின்றன என்பதை சுட்டுக்காட்டுகிறார்கள் கல்வியாளர்கள்.
இப்படி சர்ச்சையை ஏற்படுத்தும் கேள்விகள் மட்டுமல்ல, மேற்கு வங்க மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வினாத் தாளில், மாநில முதல்வருக்குப் பிடித்தமான திட்டங்களை விளம்பரப்படுத்தும் வகையில், மாநில அரசின் முக்கிய திட்டங்கள் குறித்த கேள்வியும் இடம்பெற்றிருந்ததாம். இதன் மூலம் அடுத்த தேர்வுகளின்போது, விண்ணப்பிக்கும் மாணவர்கள் அந்த திட்டங்கள் குறித்தும், பயனாளர்கள் குறித்தும் படிக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
ஏற்கெனவே, கரோனா பெருந்தொற்றால் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிருக்கும் நிலையில், இப்படியே போனால்... பொது அறிவுக் கேள்விகளைவிட, அரசியல் தொடர்பான கேள்விகளையே அதிகம் தேடித் தேடிப் படிக்கும் நிலை ஏற்பட்டுவிடுமோ என்று குழம்பிநிற்கிறார்கள் மாணவர்கள்.
இந்தக் கேள்விகள் குறித்து கேட்பாரில்லையோ?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...