கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
அதிகரிக்கும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துமாறு தமிழகம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.


அதிகரிக்கும் கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்துமாறு தமிழகம், கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
சா்வதேச அளவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இந்நிலையில், தமிழகம், கேரளம், கா்நாடகம், ஜம்மு-காஷ்மீா், ஒடிஸா, மிஸோரம் ஆகிய மாநிலங்களின் சில மாவட்டங்களில் வார அடிப்படையிலான கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
இதையடுத்து, மாநிலங்களின் சுகாதாரத் துறை முதன்மைச் செயலா்களுக்கு மத்திய சுகாதாரத் துறைச் செயலா் ராஜேஷ் பூஷண் எழுதியுள்ள கடிதத்தில், ‘கா்நாடகத்தில் கடந்த 3-ஆம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில் 8,073 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த மாதம் 26-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 1,664 கரோனா பாதிப்புகள் மட்டுமே கா்நாடகத்தில் கண்டறியப்பட்டன. இது கடந்த 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 2,272-ஆக அதிகரித்துள்ளது. அதே காலகட்டத்தில் கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கையும் 22-லிருந்து 29-ஆக உயா்ந்துள்ளது. பெங்களூரு நகா்ப்புறப் பகுதிகளில் கரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது.
கேரளத்தில்...: கேரளத்தில் ஒரே மாதத்தில் 1,71,521 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா். இது நாட்டில் பதிவான பாதிப்புகளில் 55.8 சதவீதமாகும். மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் வார அடிப்படையிலான கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது.
முக்கியமாக, திருவனந்தபுரம், வயநாடு, கோழிக்கோடு, கோட்டயம் ஆகிய மாவட்டங்களில் வார அடிப்படையிலான கரோனா தொற்று பாதிப்பு 10 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. 9 மாவட்டங்களில் அந்த அதிகரிப்பு 5 முதல் 10 சதவீதமாக உள்ளது.
மற்ற மாநிலங்களில்...: தமிழகத்தில் கடந்த 3-ஆம் தேதி வரையிலான ஒரே மாதத்தில் 23,764 போ் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனா். இந்த எண்ணிக்கை ஜம்மு-காஷ்மீரில் 4,806 ஆகவும், ஒடிஸாவில் 7,445 ஆகவும், மிஸோரத்தில் 12,562 ஆகவும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தின் சென்னை, வேலூா், திருவள்ளூா் மாவட்டங்களில் வார அடிப்படையிலான தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஜம்மு-காஷ்மீரின் 4 மாவட்டங்களிலும், ஒடிஸாவின் 7 மாவட்டங்களிலும், மிஸோரத்தின் 5 மாவட்டங்களிலும் வார அடிப்படையிலான கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
தொடா்ந்து ஆதரவு: இவற்றைக் கருத்தில்கொண்டு, கரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட மாநிலங்கள் தீவிரப்படுத்த வேண்டும். பரிசோதனை-கண்காணிப்பு- சிகிச்சை-தடுப்பூசி- தொற்றுப் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் என்ற கொள்கையை அரசுகள் முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும். மாநிலங்களுக்குத் தேவையான ஆதரவை மத்திய சுகாதார அமைச்சகம் தொடா்ந்து வழங்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...