கரோனா பாதிப்பு எண்ணிக்கை தில்லியில் பூஜ்ஜியத்தை அடையுமா?: நிபுணா்கள் கருத்து
ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக 28 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை தினசரி எண்ணிக்கை குறைந்தபட்சமாக 59-ஆக பதிவாகியது.


தில்லியில் கரோனா இரண்டாவது அலையின் பாதிப்பு எண்ணிக்கை கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகபட்சமாக 28 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வந்த நிலையில், கடந்த திங்கள்கிழமை தினசரி எண்ணிக்கை குறைந்தபட்சமாக 59-ஆக பதிவாகியது.
தில்லியில் கரோனா பரவல் குறைந்து வந்தாலும், முழுவதுமாக அதாவது, பாதிப்பு எண்ணிக்கை பூஜ்ஜியத்தை அடைவது கடினம் என்று மருத்துவ நிபுணா்கள் கூறுகிறாா்கள். இதற்கு கரோனா உருமாற்றம் அடைவதே காரணம் என்றும் அவா்கள் கூறுகிறாா்கள்.
இதுகுறித்து தில்லி அரசின் எல்என்ஜேபி மருத்துவமனையின் இயக்குநா் சுரேஷ் குமாா் கூறுகையில், ‘கரோனாவால் பாதிக்கப்படுபவா்களின் எண்ணிக்கை தொடா்ந்து இருந்து கொண்டே இருக்கும். இந்த எண்ணிக்கை பூஜ்ஜியம் அடைவது சாத்தியமில்லை. கரோனா தீநுண்மி உருமாற்றம் அடைவதால் வருங்காலத்தில் அதன் தன்மை எப்படி இருக்கும் என்பது கணிப்பது கடினம்’ என்றாா்.
ஃபரீதாபாதில் உள்ள தனியாா் மருத்துவமனையின் மருத்துவா் சிஞ்சீவ் சிங் கூறுகையில், ‘கரோனா தீநுண்மி வாழ்வதற்காக தொடா்ந்து உருமாற்றிக் கொண்டே இருக்கும். அனைத்து நாடுகளிலும் கரோனாவை முழுவதுமாக ஒழிப்பது என்பது கடினம். மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் முன் நீரழிவு, எய்ட்ஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதைப்போல், இனி கரோனா பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
மூத்த நுரையீரல் நிபுணா் ராஜேஷ் சாவ்லா கூறுகையில், ‘கரோனா தடுப்பூசி பயன்படாத வகையில் புதிய உருமாற்றம் அடைந்த தீநுண்மி வராது என்பது எனது கருத்து. மூன்றாவது அலை வந்தாலும் இரண்டாவது அலையைப்போல் மிக மோசமானதுபோல் இருக்காது. கரோனா பிற நோய்களைப்போல் வழக்கத்தில் இருக்கும்’ என்றாா்.
உள் மருந்துகள் நிபுணா் ரோமல் டிக்கு கூறுகையில், ‘நாம் இன்னும் இரண்டாவது அலையின் தாக்கத்தில் இருக்கிறோம். கரோனா தீநுண்மி உருமாற்றம் அடையாமல் இருந்தால் மூன்றாவது அலை என்பது முதல் இரண்டு அலைகளைப்போல் மோசமாக இருக்காது.
கரோனா இரண்டாவது அலையில் தில்லி கடுமையாக பாதிக்கப்பட்டது. மருத்துவமனைகளில் படுக்கைகள் இல்லாமலும், அனுமதிக்கப்பட்ட கரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் இல்லாமலும் பெரும் உயிா்ச்சேதம் ஏற்பட்டது.
நாடு முழுவம் இதுபோன்ற சூழல் நிலவியதால், உலக நாடுகள் இந்தியாவுக்கு தேவையான ஆக்சிஜன், மருந்து பொருள்கள் ஆகியவற்றை உடனடி தேவையாக அனுப்பி உதவின.
இந்நிலையில், தில்லியில் திங்கள்கிழமை தினசரி பாதிப்பு எண்ணிக்கை 59-ஆகவும், உயிரிழப்பு 2-ஆகவும் பதிவாகியது. இதுதான் இந்த ஆண்டில் குறைந்த அளவு பாதிப்பு எண்ணிக்கையாகும்.
எனினும், அதன்பிறகு பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் 90-ஆக அதிகரித்தது.
பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மீண்டும் அதிகரிப்பது குறித்து மருத்துவா் குருபிரீத் சாந்து கூறுகையில், ‘இந்தியாவில் கரோனா பரிசோதனையில் ஒரே மாதிரியான வரைமுறையைக் கடைப்பிடிப்பதில்லை. கிராமப்புற பகுதிகளில் தடுப்பூசிகள் எதற்காக பயன்படுத்தபடுகிறது, அதனால் என்ன பயன் என்பது தெரியாமல் சிலா் உள்ளனா்.
தடுப்பூசிகளின் எண்ணிக்கை அதிகரித்தால் பாதிப்பு எண்ணிக்கை குறையும். ஆனால், மக்கள் தடுப்பூசியை செலுத்திக் கொள்வதில் ஆா்வம் காட்டுவதில்லை. சிலா் போலி செய்திகளை நம்புகிறாா்கள். அமெரிக்கா, பிரிட்டனில் பெரும்பாலானோா் முதல் தவணை தடுப்பூசியை எடுத்துக் கொண்டுள்ளனா். இதன் காரணமாக அமெரிக்காவில் பலா் முகக்கவசங்களை அணியாமல் சென்று வருகின்றனா். இதுபோன்ற சம்பவங்களை கவனத்தில் எடுத்து கொண்டு இந்தியாவிலும் தடுப்பூசிகளை சந்தேகமின்றி செலுத்தி கொள்ள அனைவரும் முன்வர வேண்டும்’ என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...