700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு: பகீர் கிளப்பும் வருமான வரித்துறை

தைனிக் பாஸ்கர் குழுமம் 700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.
வருமானவரித் துறை
வருமானவரித் துறை

மத்திய பிரதேச மாநிலம் போபாலை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தைனிக் பாஸ்கா் குழுமம் ஊடகம், ஜவுளி, மின்சாரம், மனை விற்பனை உள்பட பல்வேறு வா்த்தகத் துறைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்தக் குழுமம் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது. 

அதன் அடிப்படையில் போபால், தில்லி, குஜராத் மாநிலம் ஆமதாபாத், உத்தர பிரதேச மாநிலம் நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் அந்தக் குழுமம் சம்பந்தப்பட்ட இடங்களில் கடந்த 22ஆம் தேதி வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

சோதனை நடைபெற்று இரண்டு நாள்கள் ஆகியுள்ள நிலையில், பங்குச் சந்தை விதிகளை மீறியுள்ளதாகவும் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகவும் தைனிக் பாஸ்கர் குழுமம் மீது வருமான வரித்துறை குற்றம்சாட்டியுள்ளது.

இதுகுறித்து வருமானவரித்துறை வெளியிட்ட அறிக்கையில், "அவர்களின் ஊழியர்களின் பெயர்களில் பல்வேறு நிறுவனங்கள் நடத்திவருவது தெரியவந்துள்ளது. இதன்மூலம், செய்யாத செலவுக்கு கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. தங்களின் பெயர்களில் நிறுவனம் தொடங்கப்பட்டிருப்பது என்பதே ஊழியர்களுக்கு தெரியவில்லை.

செய்யாத செலவுகளுக்கு கணக்கு காண்பிக்கவே சில நிறுவனங்கள் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு வங்கி கணக்கிலிருந்து வேறு வங்கி கணக்குக்கு லாபம் மாற்றப்பட்டுள்ளது. மற்ற நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காக இது பயன்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளில், இதன் மூலம் 700 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளது. இதை விட அதிகமாகக் கூட வரி ஏய்ப்பு நடைபெற்றிருக்கலாம். எனவே, இதுகுறித்து விசாரணை நடைபெற்றுவருகிறது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com