குழப்பம் முடிவுக்கு வந்தது; எடியூரப்பா ராஜிநாமா: கட்சிப் பணியில் ஈடுபடப் போவதாக அறிவிப்பு

கர்நாடக மாநில முதல்வர் பதவியிலிருந்து பி.எஸ். எடியூரப்பா திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார். தொடர்ந்து கட்சிப் பணியில் ஈடுபடப் போவதாக அவர் அறிவித்துள்ளார்.
பி.எஸ். எடியூரப்பா
பி.எஸ். எடியூரப்பா


பெங்களூரு: கர்நாடக மாநில முதல்வர் பதவியிலிருந்து பி.எஸ். எடியூரப்பா திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார். தொடர்ந்து கட்சிப் பணியில் ஈடுபடப் போவதாக அவர் அறிவித்துள்ளார். இதன்மூலம் கர்நாடக பாஜகவில் நீண்டகாலமாக நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது.

75 வயதான பிறகு முக்கியப் பதவிகளை இளம் தலைமுறையினருக்கு விட்டுக் கொடுக்க வேண்டுமென்ற நடைமுறை பாஜகவில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. 78 வயதான எடியூரப்பாவுக்கு மட்டும் விலக்களித்திருந்த பாஜக மேலிடத் தலைமை, 2023-ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி கட்சிக்கு புதிய தலைமையை உருவாக்கத் திட்டமிட்டு வந்தது. அதற்காக முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்து புதிய தலைமைக்கு வழிவிடும்படி எடியூரப்பாவை அறிவுறுத்தி வந்தது.

முதல்வர் பதவியில் இருந்து எடியூரப்பாவை நீக்கும்படி பாஜக எம்.எல்.ஏ.க்கள் பலர் மேலிடத் தலைவர்களைச் சந்தித்து முறையிட்டு வந்தனர். எடியூரப்பா நீக்கப்படுவார் என்று பாஜக எம்.எல்.ஏ.க்கள் பலர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பகிரங்கமாகவே கூறி வந்தனர். இதை மறுத்து வந்த எடியூரப்பா, கடைசியாக கட்சி மேலிடத் தலைவர்களின் விருப்பத்துக்கு இணங்க முதல்வர் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

ராஜிநாமா அறிவிப்பு: பெங்களூரில் உள்ள விதான்சௌதாவில் திங்கள்கிழமை நடைபெற்ற பாஜக அரசின் 2 ஆண்டுகள் சாதனை விழாவில் பங்கேற்றபோது, தனது ராஜிநாமா முடிவை கண்ணீர் மல்க எடியூரப்பா அறிவித்தார். அப்போது, அவர் பேசியதாவது:

முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய முடிவெடுத்திருக்கிறேன். வருத்தப்பட்டு அல்லாமல் மகிழ்ச்சியாக பதவியை ராஜிநாமா செய்கிறேன். 75 வயதைக் கடந்த பிறகும் கர்நாடக மக்களுக்கு முதல்வராக 2 ஆண்டுகள் சேவையாற்ற வாய்ப்பளித்த பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி.நட்டா ஆகியோருக்கு நன்றிக் கடன்பட்டுள்ளேன்.

எனது 2 ஆண்டு கால ஆட்சியில் பல்வேறு அக்னிப் பரீட்சைகளை எதிர்கொண்டேன். முதல்வராகப் பதவியேற்றபோது அமைச்சரவை அமையவில்லை. ஆனால், மாநிலம் வெள்ளத்தில் தத்தளித்தது. அப்போது தனி ஆளாக வெள்ள நிவாரணப் பணிகளைக் கவனிக்க பயணம் மேற்கொண்டேன். அதன்பிறகு கரோனா பெருந்தொற்று ஏற்பட்டது. பல சவால்களுக்கு இடையே முதல்வராக இருந்தேன் என்றார்.

ஆளுநருடன் சந்திப்பு: அதன்பிறகு ஆளுநர் மாளிகைக்குச் சென்ற எடியூரப்பா, தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநர் தாவர்சந்த் கெலாட்டிடம் அளித்தார். ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக ஆளுநர் மாளிகை தெரிவித்தது. மேலும், எடியூரப்பா தலைமையிலான அமைச்சரவை கலைக்கப்படுவதாகவும் ஆளுநரின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. புதிய முதல்வர் பதவி ஏற்கும் வரை காபந்து முதல்வராக நீடிக்கும்படி எடியூரப்பாவை ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

அழுத்தம் இல்லை
ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியே வந்த பிறகு செய்தியாளர்களிடம் எடியூரப்பா கூறியதாவது: 

முதல்வர் பதவியை ராஜிநாமா செய்ய 2 மாதங்களுக்கு முன்னரே முடிவு செய்து விட்டேன். எனது அரசு பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்ததால், தற்போது ராஜிநாமா செய்திருக்கிறேன். எனது ராஜிநாமாவுக்கு கட்சித் தலைமையிடம் இருந்து எவ்வித அழுத்தமும் அளிக்கப்படவில்லை. எனது சொந்த விருப்பத்தின் பேரிலேயே முதல்வர் பதவியை ராஜிநாமா செய்துள்ளேன். இதன்மூலம் புதியவர்கள் முதல்வராகப் பணியாற்ற வழிவிட்டுள்ளேன். அடுத்த முதல்வர் யாராக இருக்க வேண்டுமென்பதை நான் பரிந்துரைக்க மாட்டேன். அதை கட்சி மேலிடமே முடிவு செய்யும். முதல்வராக யாரைத் தேர்ந்தெடுத்தாலும், அவர்களோடு ஒத்துழைத்து பணியாற்றுவேன்; யாருடைய பெயரையும் பரிந்துரைக்க விரும்பவில்லை.

ஆளுநர் பதவியை ஏற்பீர்களா என்று கேட்கிறீர்கள். மத்திய அமைச்சராகப் பணியாற்றும்படி வாஜ்பாய் என்னிடம் முன்னர் கேட்டபோது, கர்நாடகத்தில் கட்சியை வளர்க்க விரும்புவதாகக் கூறினேன். எனவே, ஆளுநராகப் பணியாற்றும் பேச்சுக்கே இடமில்லை. கர்நாடகத்தில் பாஜகவை பலப்படுத்த தொடர்ந்து பங்காற்றுவேன். எந்தப் பதவியையும் நான் கேட்கவில்லை; கொடுத்தாலும் ஏற்கும் நிலையில் நான் இல்லை. காங்கிரஸ்-மஜதவில் இருந்து விலகி, பாஜக அரசு அமையக் காரணமாக இருந்தவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுப்பது குறித்து புதிய முதல்வர் முடிவெடுப்பார். எல்லோரும் இணைந்து பணியாற்ற இருக்கிறோம் என்றார்.

பின்னர், தனது சுட்டுரையில் எடியூரப்பா பதிவிடுகையில்,"கர்நாடக மக்களுக்கு சேவையாற்ற வாய்ப்பளித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

கர்நாடக புதிய முதல்வர் யார்?
கர்நாடக முதல்வர் பதவியிலிருந்து எடியூரப்பா விலகியுள்ள நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய முதல்வரை அடையாளம் காணும் பணியில் பாஜக தேசியத் தலைமை தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.

எடியூரப்பா சார்ந்த லிங்காயத்து சமுதாயத்தில் இருந்து அரவிந்த் பெல்லத், பசவராஜ் பொம்மை, முருகேஷ் நிரானி ஆகியோரின் பெயர்கள் முதல்வர் பதவி பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, பாஜக தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ், பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி, பேரவைத் தலைவர் விஸ்வேஷ்வர ஹெத்டேகாகேரி, ஆர்.அசோக், துணை முதல்வர் சி.என்.அஸ்வத் நாராயணா, ஏற்கெனவே முதல்வராகப் பணியாற்றிய ஜெகதீஷ் ஷெட்டர் ஆகியோரின் பெயர்களும் முதல்வர் பதவிக்கு பரிசீலிக்கப்பட்டு வருவதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com