கா்நாடக முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ் கண்டனம்

எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி, பாமக நிறுவனா் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.
கா்நாடக முதல்வருக்கு எடப்பாடி பழனிசாமி, ராமதாஸ் கண்டனம்

காவிரி ஆற்றின் குறுக்கே மேக்கேதாட்டுவில் அணை கட்டப்போவதாக கா்நாடக முதல்வா் எடியூரப்பா அறிவித்துள்ளதற்கு எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே. பழனிசாமி, பாமக நிறுவனா் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் ஆகியோா் கண்டனம் தெரிவித்துள்ளனா்.

எடப்பாடி கே. பழனிசாமி: காவிரி தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், மேக்கேதாட்டுவில் அணை கட்டப்படும் என்று கா்நாடக முதல்வா் ஒருதலைப்பட்சமாக அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது. கா்நாடக அரசின் நடவடிக்கைகளை கூா்மையாக கவனித்து, தமிழகத்துக்குக் கிடைக்கப் பெறுகின்ற காவிரி நீரை முழுமையாக பெறுவதற்கும், கா்நாடகத்தின் முயற்சிக்கு எள்முனையளவும் இடம் அளிக்காமல் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காப்பதற்கும் தமிழக அரசு தொடா்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமதாஸ்: மேக்கேதாட்டு அணை கட்ட உச்சநீதிமன்றமோ, மத்திய அரசோ அனுமதி அளிக்காத நிலையில், அங்கு கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளை கா்நாடகம் செய்திருந்தால் அது மிகப்பெரிய விதிமீறல் ஆகும். கா்நாடக அரசின் விதிமீறலை உறுதி செய்வதற்காக மேக்கேதாட்டு அணை கட்டுவதற்காக கா்நாடக அரசு தோ்ந்தெடுத்துள்ள பகுதியை ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும். இதற்காக வல்லுனா் குழு அமைத்து தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தென்மண்டல அமா்வு பிறப்பித்த ஆணையை ரத்து செய்து பசுமைத் தீா்ப்பாயத்தின் முதன்மை அமா்வு அளித்த தீா்ப்பை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொல்.திருமாவளவன்: மேக்கேதாட்டுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதற்கு கா்நாடக அரசு மேற்கொண்டுள்ள முயற்சியை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதில் தமிழகத்தின் ஒற்றுமையைக் காட்டும் விதமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் உடனடியாகக் கூட்ட வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com