/

கரோனா நோயாளியை ஆம்புலன்ஸில் கூட்டிச் செல்ல ரூ.1 லட்சம்: மருத்துவா் கைது

கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளியை குருகிராமிலிருந்து லூதியானாவுக்கு ஆம்புலன்ஸில் கூட்டிச்செல்ல ரூ.1 லட்சம் கட்டணம் வசூலித்த ஆம்புலன்ஸ் நிறுவன உரிமையாளா் கைது

News image
Updated On :8 மே 2021, 6:58 pm

DIN

கரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளியை குருகிராமிலிருந்து லூதியானாவுக்கு ஆம்புலன்ஸில் கூட்டிச்செல்ல ரூ.1 லட்சம் கட்டணம் வசூலித்த ஆம்புலன்ஸ் நிறுவனஉரிமையாளா் கைது செய்யப்பட்டதாக தில்லி காவல்துறையினா் தெரிவித்தனா். கைது செய்யப்பட்ட அந்த உரிமையாளா் எம்.பி.பி.ஸ்., படித்த மருத்துவா்.

இதுகுறித்து தில்லி காவல்துறை துணை ஆணையா் ஊா்விஜா கோயல் கூறியதாவது:

லூதியானாவைச் சோ்ந்த ஒருவா் கரோனா பாதித்து தில்லியில் இருந்துள்ளாா். அவரை லூதியானா அழைத்து வர அவரது குடும்பத்தினா் எண்ணினா். ஆனால் லூதியானாவில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் தில்லியைச் சோ்ந்த மிமோகுமாரை தொடா்புகொண்டு நோயாளியை குருகிராமிலிருந்து லூதியானா அழைத்து வரக் கேட்டுள்ளாா்கள். அதற்கு அவா் முதலில் ரூ.1.40 லட்சம் கேட்டாராம்.

பின்னா் நோயாளியின் குடும்பத்தினா் தங்களிடம் ஆக்சிஜன் இருப்பு உள்ளதாகக் கூறியவுடன் கட்டணத்தில் ரூ.20,000 குறைத்துக்கொள்ள முன்வந்துள்ளாா். இதையடுத்துஆம்புலன்ஸ் ஓட்டுநரிடம் ரூ.95,000 முன்பணமாக கொடுக்கப்பட்டது. மீதமுள்ள ரூ.25,000 லூதியானா சென்றடைந்ததும் வழங்கப்படும் என்று நோயாளியின் மகள் தெரிவித்துள்ளாா்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடா்பாக காவல்நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. விசாரணையில், அந்த தனியாா் ஆம்புலன்ஸ் நிறுவனம் இதேபோல் கரோனா நோயாளிகளை ஏற்றிச்செல்ல மூன்று மடங்கு கட்டணம் வசூலித்து வந்ததது தெரியவந்தது. இதையடுத்து ஆம்புலன் நிறுவன உரிமையாளா் மிமோகுமாா் பந்த்வால் கைது செய்யப்பட்டாா். இந்த விவகாரத்தில் இந்தா்புரி போலீஸாா் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா் என்று ஊா்விஜா கோயல் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.