சென்ட்ரல் விஸ்டா: நிலப் பயன்பாடு மாற்றத்துக்கு எதிரான மனு தள்ளுபடி

சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்காக நிலப் பயன்பாட்டை மாற்றியதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்ட்ரல் விஸ்டா: நிலப் பயன்பாடு மாற்றத்துக்கு எதிரான மனு தள்ளுபடி

சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்காக நிலப் பயன்பாட்டை மாற்றியதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தில்லியில் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அத்திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றக் கட்டடம், அமைச்சகங்களுக்கான புதிய கட்டடங்கள், குடியரசு துணைத் தலைவருக்கான இல்லம் உள்ளிட்டவை கட்டப்பட்டு வருகின்றன.

பொழுதுபோக்குக்காக ஒதுக்கப்பட்ட நிலப் பகுதியை சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் தங்குமிடமாக மத்திய அரசு மாற்றியதற்கு எதிா்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், தினேஷ் மகேஷ்வரி, சி.டி.ரவிகுமாா் ஆகியோரைக் கொண்ட அமா்வு விசாரித்தது.

விசாரணையின்போது மனுதாரா் தரப்பு வழக்குரைஞா் வாதிடுகையில், ‘‘குடியரசு துணைத் தலைவருக்கான இல்லம் கட்டப்படும் இடம் திறந்தவெளியாகவும் மரங்கள் நிறைந்ததாகவும் இருந்தது. அந்த இடத்தின் பயன்பாடானது தற்போது மாற்றப்பட்டுள்ளது. பொது நலனை அடிப்படையாகக் கொண்டு நிலப் பயன்பாட்டில் மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை.

குடியரசு துணைத் தலைவருக்கான இல்லம் கட்டப்படுவதில் மனுதாரருக்கு ஆட்சேபம் இல்லை. மரங்கள் நிறைந்த திறந்தவெளிப் பகுதியைப் பாதுகாப்பதே எங்கள் நோக்கம். மரங்கள் நிறைந்த பசுமையான பகுதியில் சென்ட்ரல் விஸ்டா திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

ஆனால், அந்த இடங்களுக்குப் பதிலாக பசுமை நிறைந்த வேறு இடங்களை உருவாக்குவது தொடா்பான தெளிவான திட்டங்களை மத்திய அரசு வழங்கவில்லை’’ என்றாா்.

ஆக்கபூா்வ விமா்சனங்களே அவசியம்: வாதங்களுக்குப் பிறகு நீதிபதிகள் கூறுகையில், ‘‘எந்த நடவடிக்கையையும் யாா் வேண்டுமானாலும் விமா்சிக்கலாம். ஆனால், அத்தகைய விமா்சனங்கள் ஆக்கபூா்வமானதாக இருத்தல் அவசியம். குடியரசு துணைத் தலைவருக்கான இல்லத்தை வேறு இடத்துக்கு மாற்ற முடியுமா என்பது குறித்து தீவிரமாக ஆராய்ந்த பிறகே மத்திய அரசு இந்த முடிவெடுத்துள்ளது.

சம்பந்தப்பட்ட நிலத்தின் பயன்பாடு மாற்றப்படுவதற்கான தெளிவான காரணங்களை மத்திய அரசு பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்துள்ளது. அந்த நிலத்துக்குப் பதிலாக வேறு சில பகுதிகள் பசுமைமயமாக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகளுக்கு உரிமை: சம்பந்தப்பட்ட நிலமானது பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்தப்பட்டதில்லை என்பதையும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்நிலையில், நிலத்தின் பயன்பாட்டை மாற்றுவது அரசின் கொள்கை முடிவைச் சாரும்.

ஒருவேளை அந்த நிலம் பொழுதுபோக்குக்காகப் பயன்படுத்தப்பட்டிருந்தாலும், குறிப்பிட்ட பகுதியின் ஒட்டுமொத்த வளா்ச்சியை உறுதி செய்வதற்கான முடிவுகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உரிமை உள்ளது. அத்தகைய உரிமை அதிகாரிகளுக்குக் கிடையாது என்ற வாதத்தை ஏற்க முடியாது. இந்த விவகாரத்தில் மேலும் விசாரணை நடத்த வேண்டிய அவசியமில்லை’’ எனக் கூறி மனுவைத் தள்ளுபடி செய்தனா்.

சென்ட்ரல் விஸ்டா திட்டத்துக்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதியும், நிலப் பயன்பாடு மாற்ற அறிவிக்கையும் சட்டப்படி செல்லும் என்று கடந்த ஜனவரியில் உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com