நினைத்ததை விட கோவேக்சினின் செயல்திறன் குறைவு; லான்செட் ஆய்வில் புதிய தகவல்

நாட்டில் தடுப்பூசி விநியோக திட்டம் தொடங்கப்பட்டதையடுத்து, எய்ம்ஸ் பணியாளர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி பிரத்யேகமாக வழங்கப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

இந்தியாவில் கரோனாவுக்கு எதிரான போரில் பயன்படுத்தப்படும் முக்கிய தடுப்பூசிகளில் ஒன்று கோவேக்சின். அறிகுறிகள் தென்படாத கரோனாவுக்கு எதிராக இது 50 சதவிகித பாதுகாப்பை அளிக்கிறது என்றும் இது முன்பு நினைத்ததைவிட குறைவு என்றும் உலக அளவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

உலகின் பிரபல மருத்துவ இதழான லான்செட் வெளியிட்ட ஆய்வில், " இந்தாண்டு இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை தாக்கியபோது, கரோனாவால் பாதிக்கப்பட்ட 2,714 சுகாதார பணியாளர்களுக்கு ஏப்ரல் 15 முதல் மே 15 வரை ஆர்டி-பிசிஆர் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களின் தரவுகளை கொண்டு எய்ம்ஸ் ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 

நாட்டில் தடுப்பூசி விநியோக திட்டம் தொடங்கப்பட்டதையடுத்து, இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பணியாளர்களுக்கு இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட கோவேக்சின் தடுப்பூசியே பிரத்யேகமாக வழங்கப்பட்டது.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டு இரண்டு வாரங்களுக்கு பிறகு, அறிகுறிகள் தென்படாத கரோனாவுக்கு எதிரான தடுப்பூசியின் செயல்திறன் இடைக்கால முடிவுகளின் தெரிவிக்கப்பட்டது போல 77.8 சதவிகிதம் அல்லாமல் அதை விட குறைவாக இருப்பது தெரியவந்துள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகள் இந்த மாத தொடக்கத்தில் வெளியிடப்பட்டது.

மருத்துவ பணியாளர்களிடையே பரவல் அதிகரிப்பு விகிதமும் வைரஸ் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பும் அதிகரித்திருப்பதன் விளைவாகவே கோவேக்சினின் செயல்திறன் குறைந்திருக்கிறது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதேபோல், சமீபத்தில் பரவிவரும் டெல்டா கரோனா, தடுப்பூசி தரும் பாதுகாப்பை மழுங்ககடிக்க செய்கிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தில்லி எய்ம்ஸின் கூடுதல் பேராசிரியர் மனிஷ் சோனேஜா கூறுகையில், "பிபிவி152 எவ்வாறு செயல்படுகிறது என்னும் முழு தகவலை எங்கள் ஆய்வு வழங்குகிறது. இந்தியாவில் கரோனா அதிகரிப்பு நிலைமைகளின் பின்னணி, டெல்டா மாறுபாட்டின் சாத்தியமான நோயெதிர்ப்புத் திறன்கள்
கருத்தில் கொள்ளப்பட வேண்டும்" என்றார்.

தீவிர பரவல் தன்மை கொண்ட டெல்டா கரோனாவுக்கு எதிராக அனைத்து வகை கரோனா தடுப்பூசிகளின் செயல்திறனும் குறைந்துவருவது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. இதற்கு மத்தியில், கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிக்க பாரத் பயோடெக் நிறுவனம் முயற்சி மேற்கொண்டுவருகிறது. அதேபோல், வெளிநாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய அரசு திட்டமிட்டுவருகிறது.

இந்த நிலையில், வெளியான கோவேக்சின் தடுப்பூசி குறித்த புதிய ஆய்வு, அதன் விநியோகத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை அதகரித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com