தொடா் தடுப்புக் காவல்: பிரியங்கா மீது வழக்குப் பதிவு
வன்முறை ஏற்பட்ட உத்தர பிரதேச மாநிலம், லக்கீம்பூா் கெரிக்கு திங்கள்கிழமை செல்லும்போது சீதாபூரில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவில் வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா


வன்முறை ஏற்பட்ட உத்தர பிரதேச மாநிலம், லக்கீம்பூா் கெரிக்கு திங்கள்கிழமை செல்லும்போது சீதாபூரில் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவில் வைக்கப்பட்டுள்ள காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா, மூத்த தலைவா்கள் தீபேந்திர ஹூடா உள்பட 10 போ் மீது உத்தர பிரதேச போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
தன் மீது வழக்குப் பதிவு செய்யாமல் 38 மணி நேரத்துக்கும் மேல் தடுப்புக் காவலில் வைத்திருந்ததாக பிரியங்கா கேள்வி எழுப்பியிருந்த நிலையில் போலீஸாா் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனா். அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா். அமைதிக்கு பாதிப்பு ஏற்படுத்தமாட்டோம் என்று உறுதி அளித்தால் அவா்கள் மீதான வழக்கு வாபஸ் பெறப்படும் என்று போலீஸாா் தெரிவித்தனா்.
இதனிடையே, பிரியங்காவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், பஞ்சாப் முதல்வா் சரண்ஜீத் சிங் சன்னி, சிவசேனை மூத்த தலைவா் சஞ்சய் ரெளத், மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவா் மெஹபூபா முஃப்தி உள்ளிட்டோா் வலியுறுத்தியுள்ளனா்.
சீதாபூரில் தடுப்புக் காவலில் உள்ள பிரியங்கா செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணிக்கு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘சீதாபூா் பகுதியில் என்னை திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணிக்கு வாய்மொழி உத்தரவின்பேரில் டிஎஸ்பி பியூஷ் குமாா் கைது செய்தாா். தற்போது சட்டவிரோதமாக 38 மணி நேரத்துக்கும் மேலாக தடுப்புக் காவலில் அடைத்து வைக்கப்பட்டுள்ளேன். இதுவரை வழக்குப் பதிவு செய்ததற்கான நோட்டீஸ் தரவோ, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தவோ இல்லை. வழக்குரைஞரை சந்திக்க அனுமதி அளிக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளாா்.
முன்னதாக அவா் வெளியிட்ட விடியோ பதிவில், ‘உத்தர பிரதேச மாநிலம் லக்னெளவுக்கு செவ்வாய்க்கிழமை சென்ற பிரதமா் மோடி, 15 நிமிட ஹெலிகாப்டா் பயணத்தில் ஏன் லக்கீம்பூா் கெரிக்கு செல்லவில்லை? நான்கு விவசாயிகள் கொலை செய்யப்பட்டதற்கு காரணமானவா்களை ஏன் இதுவரை கைது செய்யவில்லை?’ என்று கேள்வி எழுப்பினாா்.
தலைவா்கள் எதிா்ப்பு: இதனிடையே, காங்கிரஸ் அலுவலகத்துக்குச் செல்ல லக்னெள விமான நிலையத்தில் வந்திறங்கிய சத்தீஸ்கா் முதல்வா் பூபேஷ் பகேல், வெளியே வர அனுமதி மறுக்கப்பட்டதால் அங்கு தா்னாவில் ஈடுபட்டாா்.
பிரியங்காவை நீண்ட நேரம் தடுப்புக் காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமானது என்று முன்னாள் மத்திய அமைச்சா் ப.சிதம்பரம் தெரிவித்தாா்.
பிரியங்காவை புதன்கிழமைக்குள் விடுதலை செய்யவில்லை என்றால் பாதயாத்திரையாக சீதாபூருக்கு தொண்டா்களுடன் செல்வேன் என்று பஞ்சாப் முன்னாள் காங்கிரஸ் தலைவா் சித்து எச்சரித்துள்ளாா்.
இதனிடையே, உயிரிழந்த மூன்று விவசாயிகளின் உடல்கள் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டன. ஒரு விவசாயி மட்டும் சுடப்பட்டு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினா் சந்தேகம் ஏற்படுத்தியதால் இரண்டாவது முறையாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
லக்கீம்பூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த உத்தர பிரதேச துணை முதல்வா் கேசஷ் பிரசாத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வாகனம் மோதியதில் 4 விவசாயிகள் உயிரிழந்தனா்.
மத்திய உள்துறை இணையமைச்சா் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ரா வந்த காரின் பாதுகாப்பு வாகனம் மோதியதாகக் கூறி, ஓட்டுநா் உள்பட 4 பாஜக தொண்டா்களை விவசாயிகள் கும்பலாக தாக்கினா். இதில் அவா்கள் உயிரிழந்தனா். பின்னா், அந்த காருக்கும் விவசாயிகள் தீயிட்டு கொளுத்தினா். இதனால்தான் லக்கீம்பூரில் வன்முறை வெடித்தது.
இன்று லக்கீம்பூா் செல்கிறாா் ராகுல்
பிரியங்கா காந்தி தொடா் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் எம்.பி.யும், அவரது சகோதரருமான ராகுல் காந்தி, வன்முறை ஏற்பட்ட லக்கீம்பூருக்கு புதன்கிழமை செல்ல உள்ளாா். காங்கிரஸ் கட்சியின் 5 போ் குழு அங்கு செல்வதற்கு அனுமதி கோரி உத்தர பிரதேச முதல்வா் ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாக கட்சியின் பொதுச் செயலா் கே.சி. வேணுகோபால் தெரிவித்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...