அவர்களுக்கு நாட்டு பற்றை ஊற்ற வேண்டும்: காஷ்மீர் மக்களுக்கு 'பாடம்' எடுக்கும் ஆர்எஸ்எஸ் தலைவர்

காஷ்மீர் மக்களுக்கு மத்திய அரசு கொடுக்கும் நிதியில் சுமார் 80 சதவிகிதம் காஷ்மீர் அரசியல்வாதிகளுக்கு சென்றது என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் குற்றம்சாட்டியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

மகாராஷ்டிரா மாநிலத்திற்குச் சென்ற ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத், அங்கு நாக்பூரில் காஷ்மீர் மற்றும் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 370 நீக்கம் ஆகியவை குறித்த புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 

அப்போது பேசிய அவர் சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்கு முன்பு வரை, காஷ்மீர் மக்களுக்குக் மத்திய அரசின் கொடுக்கும் நிதியில் சுமார் 80% காஷ்மீர் அரசியல்வாதிகளுக்கு சென்றதாகக் குற்றச்சாட்டு முன்வைத்தார்.

இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "சட்டப்பிரிவு 370 மற்றும் 35 (A) ஆகியவற்றை ரத்து செய்யும் துணிச்சலான நடவடிக்கைகளை இந்த அரசு எடுத்ததுள்ளது. இதைச் செய்ய முடியும் என யாரும் நினைத்துக் கூட பார்க்கவில்லை. நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி, அதன் பிறகு முறையான நடவடிக்கைகள் மூலமே இந்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 

இப்போது, இதனால் ஏற்பட்ட ​​வளர்ச்சியை காஷ்மீர் மக்கள் பார்க்கத் தொடங்கியுள்ளனர். சட்டப்பிரிவு 370 ஆபத்தானது இல்லை. ஆனால் அதை உருவாக்கியது ஆபத்தான நடவடிக்கை. 

ஆனால் இன்னும் கூட காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள மக்களில் சிலர், தனிநாடு வேண்டும் என்று கூறி வருகின்றனர். 

காஷ்மீர் மக்களுக்கு தாங்கள் இந்தியர்கள் என்ற உணர்வு சுத்தமாக இல்லை. இதனால் தான் அவர்கள் தனிநாடு கோருகிறார்கள். அவர்களை இந்தியர்களாக நாம் உணர வைக்க வேண்டும் மேலும், இந்தியா இல்லை என்றால் நாம் இருக்க மாட்டோம் என்பதையும் புரிய வைக்க வேண்டும். 

எனவே, அவர்களை இந்தியாவுடன் ஒருங்கிணைக்கத் தேவையான முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும். உடலின் அனைத்து பாகங்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டதைப் போல நமது நாட்டின் அனைத்து பகுதிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டிருக்க வேண்டும். இதற்கு நாம் அவர்களுக்கு நாட்டுப் பற்றை ஊட்ட வேண்டும்.

சட்டப்பிரிவு 370 நீக்கத்திற்கு முன்பு வரை, காஷ்மீர் மக்களுக்கு மத்திய அரசு கொடுக்கும் நிதியில் சுமார் 80 சதவிகிதம் காஷ்மீர் அரசியல்வாதிகளுக்கு சென்றது. அவர்கள் மக்களைப் பார்க்கக் கூட இல்லை. காஷ்மீரில் ஊழல் தலைவர்கள் சிறைக்குச் சென்றது மக்களுக்கு மகிழ்ச்சியையே ஏற்படுத்தியுள்ளது" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com