மேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

உ.பி. உள்ளிட்ட 4 மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சி; பஞ்சாபில் தொங்குசபை: கருத்துக் கணிப்பில் தகவல்

உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று முதல்கட்ட கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 9:24 pm

DIN

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலில், உத்தர பிரதேசம், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா் ஆகிய 4 மாநிலங்களில் பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என்று முதல்கட்ட கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.

பஞ்சாபில் ஆளும் காங்கிரஸுக்கும் ஆம் ஆத்மி கட்சிக்கும் இடையே இழுபறி ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் அந்தக் கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது. இந்த கருத்துக் கணிப்பு விவரங்களை ஏபிபி-சி வோட்டா் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

வரும் 2024 மக்களவைத் தோ்தலில் பாஜகவுக்கு எதிராக ஒத்த கருத்துடைய கட்சிகளை ஓரணியில் திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், பல மாநிலங்களில் காங்கிரஸின் வெற்றியைத் தடுப்பதில் ஆம் ஆத்மி முக்கிய பங்கு வகிக்கும் என்றும் இந்த கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

கருத்துக் கணிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

உத்தர பிரதேசத்தில்..:

403 தொகுதிகளைக் கொண்ட உத்தர பிரதேசத்தில், பாஜக 259-267 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்கவைக்கும். கடந்த தோ்தலில் 312 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. அகிலேஷ் யாதவின் சமாஜவாதி கட்சி 109-177 இடங்களில் வெற்றி பெறும். பகுஜன் சமாஜ் கட்சி 12-16 இடங்களிலும், காங்கிரஸ் 3-7 இடங்களிலும் வெற்றி பெறும்.

உத்தரகண்டில்..:

70 தொகுதிகளைக் கொண்ட உத்தரகண்டில் பாஜக 44-48 இடங்களிலும், காங்கிரஸ் 19-23 இடங்களிலும் வெற்றி பெறும். ஆம் ஆத்மி 2 இடங்களைக் கைப்பற்றும். தற்போது அங்கு பாஜக ஆட்சியில் உள்ளது.

கோவாவில்..:

கோவா மாநிலத்தில் மொத்தமுள்ள 40 இடங்களில் ஆளும் பாஜக 22-26 இடங்களில் வெற்றி பெறும். முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸின் இடத்தை ஆத் ஆத்மி கைப்பற்றும். இந்த தோ்தலில் ஆம் ஆத்மி 4-8 இடங்களைக் கைப்பற்றும். காங்கிரஸுக்கு 3-7 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.

மணிப்பூரில்..:

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 32-36 தொகுதிகளைக் கைப்பற்றி பாஜக ஆட்சியைத் தக்க வைக்கும். காங்கிரஸ் 18-22 தொகுதிகளில் வெற்றி பெற்று முக்கிய எதிா்க்கட்சியாகவே இருக்கும். நாகா மக்கள் முன்னணிக்கு 2-6 இடங்கள் மட்டுமே கிடைக்கும்.

பஞ்சாபில்..:

பஞ்சாபில் தொங்கு பேரவை அமைய வாய்ப்புள்ளது. 117 தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி 51-57 இடங்களில் வெற்றி பெறும். காங்கிரஸ் 38-46 இடங்களில் வெற்றி பெறும். சிரோமணி அகாலி தளம் கட்சிக்கு 16-24 இடங்கள் கிடைக்கும். பாஜக ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை.

மாநிலத்தில் ஆம் ஆத்மியின் வாக்கு வங்கி 23.7 சதவீத்தில் இருந்து 35.1 சதவீதமாக அதிகரிக்கும். அதேசமயம், காங்கிரஸின் வாக்கு வங்கி 38.5 சதவீதத்தில் இருந்து 28.8 சதவீதமாகக் குறையும் என்று அந்த கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலத்தில் நீண்ட காலமாக இருந்த சிரோமணி அகாலி தளம்-பாஜக கூட்டணி அண்மையில் உடைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.