/

நெடுஞ்சாலைகளை எப்படி நிரந்தரமாக முடக்க முடியும்?: விவசாயிகள் போராட்டம் குறித்து உச்ச நீதிமன்றம் கேள்வி

தில்லியில் போடப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றக்கோரி நொய்டாவை சேர்ந்த மோனிகா அகர்வால் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

News image
கோப்புப்படம்
Updated On :30 செப்டம்பர் 2021, 11:16 am

DIN

கடந்தாண்டு நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து தில்லியின் எல்லைப் பகுதிகளில் உள்ள சாலைகளில் தடுப்புகளை அமைத்து விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நெடுஞ்சாலைகளை எப்படி நிரந்தரமாக முடக்க முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளது. அதுமட்டுமின்றி, நீதிமன்ற வகுத்த சட்டங்களை அமல்படுத்துவது நிர்வாகத்தின் கடமை என்றும் குறிப்பிட்டுள்ளது.

தில்லி - உத்தரப்பிரதேச எல்லைகளில் உள்ள சாலைகளை மீண்டும் பயன்பாட்டிற்கு விடக்கோரி தாக்கல் செய்த வழக்கில், விவசாய சங்கங்களின் கூட்டமைப்பை பிரதிவாதியாக சேர்க்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. தில்லியில் போடப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றக்கோரி நொய்டாவை சேர்ந்த மோனிகா அகர்வால் என்பவர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

அதில், "போராட்டம் நடைபெறுவதற்கு முன்பு, தில்லிக்கு செல்ல 20 நிமிடங்களே ஆகும். ஆனால், தற்போது 2 மணி நேர நேரமாகிறது. தில்லி எல்லை பகுதியில் உள்ள உத்தரப் பிரதேச வாயிலில் போராட்டம் நடைபெறுவதால் அப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே, சாலைகளில் போடப்பட்டுள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதை விசாரித்த சஞ்சய் கிஷன் கெளல், எம். எம். சுந்தரேஷ் ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்வு, "நீதிமன்றங்கள், போராட்டங்கள், நாடாளுமன்ற விவாதங்கள் மூலமாக பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். ஆனால், நெடுஞ்சாலைகளை ஏன் முடக்க வேண்டும். இது தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இது எப்போது முடிவடையும்?" என கேள்வி எழுப்பியது.

இந்த விவகாரத்தில் அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது என அரசின் சார்பாக ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே. எம். நடராஜிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நடராஜ், "போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை மேற்கொள்ள அரசு ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளது. இதுகுறித்த விவரங்கள் தாக்கல் செய்ய பிரமாண பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.