திருமணமான பெண்களுக்குக் காதல் கடிதம் கொடுக்கலாமா? நீதிமன்றம் தீர்ப்பு

திருமணமான பெண்களுக்கு காதல் கடிதம் கொடுப்பது அவர்களை அவமானப்படுத்தும் செயல் என மும்மை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருமணமான பெண்களுக்கு காதல் கடிதம் கொடுப்பது அவர்களை அவமானப்படுத்தும் செயல் என மும்மை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

திருமணமான பெண்களின் மீது காதல் கடிதம் வீசுவது  அவர்களை அவமானப்படுத்தும் செயல் என மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை தெரிவித்துள்ளது. இதுகுறித்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீகிருஷ்ண தவரிக்கு 90,000 ருபாய் அபராதம் விதித்து உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அபராதத்தில் 85,000 ரூபாயை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அளிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நீதிமன்றம் கூறுகையில், "புகார் அளித்தவர் 45 வயதான திருமணமான பெண். அவர் மீதான காதலை வெளிப்படுத்தும் வகையில் கவிதைகள் நிறைந்த வசனங்களை எழுதி காதல் கடிதம் அளித்திருப்பது அப்பெண்ணை அவமானப்படுத்துவதற்கு சமம்.

ஒரு பெண்ணுக்கு அவரின் மானம்தான் விலைமதிப்பற்ற ஆபரணம். பெண் அவமானப்படுத்தபட்டாரா என்பதை அறிந்து கொள்ள குறிப்பிட்ட வழிமுறைகள் வகுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பெண் மீது கடிதம் வீசப்பட்டதற்கான ஆதாரங்களை நம்பாமல் இருக்க முடியவில்லை.

கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்நோக்கத்துடன் செயல்பட்டது, மூத்தம் கொடுப்பது போல் செய்கை செய்தது, பெண்ணின் மீது கூழாங்கற்களை வீசுவது போன்ற செயல்களை குற்றம்சாட்டப்பட்டவர் செய்துள்ளார் என்பது தகுந்த ஆதாரங்களால் தெரியவந்துள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2011ஆம் ஆண்டு, அக்டோபர் 3ஆம் தேதி, மளிகை கடையின் உரிமையானரான குற்றம்சாட்டப்பட்டவர், பாத்திரங்களை கழுவி கொண்டிருந்த பாதிக்கப்பட்ட பெண்ணிடம் கடிதம் கொடுக்க முயற்சித்துள்ளார். அதை வாங்க அப்பெண் மறுத்துள்ளார்.

அப்போது, பெண் மீது கடிதத்தை வீசிவிட்டு அவரை காதலிப்பதாக சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். அடுத்த நாள், ஆபாசமாக நடந்த கொண்ட அந்த நபர், காதல் கடிதம் கொடுத்தது குறித்து வெளியே தெரிவிக்கக் கூடாது என மிரட்டியுள்ளார்.

காவல்நிலையத்தில் அப்பெண் புகார் அளித்ததை தொடர்ந்து, இந்திய தண்டனை சட்டம் 354,506 மற்றும் 509 ஆகிய பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவருக்கு இரண்டாண்டுகள் கடுங்காவல் தண்டனை வழங்கி கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, 40,000 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் அதில் 35,000 பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்ட பெண் பொய்யான புகார் அளித்ததாகக் கூறி, கீழமை நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்ட ஸ்ரீகுருஷ்ண தவரி, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். 

இந்த மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை, "குற்றம்சாட்டப்பட்டவர் ஏற்கனவே 45 நாள்கள் சிறை தண்டனை அனுபவித்துள்ளார். சம்பவம் நடைபெற்ற தேதியையும் குற்றத்தின் தீவிரத்தையும் கருத்தில் எடுத்து கொண்டு குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக இந்திய தண்டனை சட்டம் பிரிவு 507 கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது.

பிரிவு 354இன் கீழ் குறைந்தபட்ச சிறை தண்டனை வழங்கப்படுவதில்லை. 2013ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்ட திருத்தத்தில்தான் சிறை தண்டனை வழங்கபடுகிறது. எனவே, 354, 509 ஆகிய பிரிவுகளின் தண்டனை காலத்தை மாற்றியமைக்கிறேன்" என தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com