வெளிநாடு செல்லாத மருத்துவருக்கு ஒமைக்ரான் வந்தது எப்படி?

கர்நாடகத்தில், இரண்டு பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், வெளிநாடு செல்லாத மயக்கமருந்து மருத்துவருக்கு ஒமைக்ரான வந்தது எப்படி என்பது குறித்து தீவிர ஆய்வு நடைபெற்று வருகிறது.
வெளிநாடு செல்லாத மருத்துவருக்கு ஒமைக்ரான் வந்தது எப்படி?
வெளிநாடு செல்லாத மருத்துவருக்கு ஒமைக்ரான் வந்தது எப்படி?
Published on
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடகத்தில், இரண்டு பேருக்கு ஒமைக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், வெளிநாடு செல்லாத மயக்கமருந்து மருத்துவருக்கு ஒமைக்ரான வந்தது எப்படி என்பது குறித்து தீவிர ஆய்வு நடைபெற்று வருகிறது.

கர்நாடகத்தில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட இருவரில் ஒருவர் மருத்துவர் என்றும் அவருடன் தொடர்பிலிருந்தவர்களுள் ஐந்து பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மாநில சுகாதாரத் துறை அமைச்சர் கே. சுதாகர் தெரிவித்திருந்தார். இவர்களில், அவரது மனைவி, அவருடன் பணியாற்றிய மருத்துவ ஊழியர்களும் அடக்கம்.

இந்த நிலையில், அவருடன் மருத்துவமனையில் பணியாற்றிய 163 பேருக்கு சனிக்கிழமை மீண்டும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெங்களூருவில் ஒமைக்ரான் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட 46 வயது மிக்க நபர் ஒரு மருத்துவர். உடல் சோர்வு, உடம்பு வலி மற்றும் லேசான காய்ச்சல் இருந்துள்ளதையடுத்து, அவர் தாமாகவே கரோனா பரிசோதனை மேற்கொண்டு தனிமைப்படுத்திக் கொண்டார். அவருக்கு சுமார் 13 நாள்களுக்கு முன்பு கரோனா உறுதி செய்யப்பட்டது. தற்போது அவர் நலமாக உள்ளார்.

அவரது பரிசோதனை முடிவுகளில் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், சிடி மதிப்பீடு குறைவாக இருந்தது. பிறகு ஒமைக்ரான் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. அதில் ஒமைக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

அவரும், அவருடன் கரோனா உறுதி செய்யப்பட்டவர்களும், மருத்துவர்களின் கண்காணிப்புக்காகவே மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர் எந்தப் பயணமும் மேற்கொள்ளவில்லை. எனினும், அவர் பங்கேற்ற இரண்டு நாள் இதய நிபுணர்கள் மாநாட்டில் பங்கேற்றவர்களின் விவரங்களை சேகரிக்கும் பணியில் பெங்களூரு மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மாநாட்டில் 75 மருத்துவர்கள், 5 தொழில்நுட்ப நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர். அனைவரையும் கண்டறிந்து அவர்களுக்கும் பரிசோதனை செய்ய முடிவு செய்துள்ளோம். எனினும், இந்த மாநாட்டில் பங்கேற்ற மருத்துவர்கள் மூலமாக, இவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று கூற முடியாது என்கிறார்கள் மருத்துவர்கள்.

இந்த மாநாடு நடைபெற்று முடிந்து அடுத்த நாளே, இவருக்கு அறிகுறி ஏற்பட்டிருக்கிறது. கரோனா பாதித்து அடுத்த நாளே அறிகுறி தென்படாது. எனவே, அதற்கு முன்பே அவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கு வேண்டும் என்கிறார்கள்.

நாட்டில் ஒமைக்ரான் உறுதி செய்யப்பட்ட மற்றொருவர் 66 வயதுமிக்க நபர் தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்தவர். அவர் இந்தியா வந்து, மீண்டும் நாடு திரும்பிவிட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com