ஒமைக்ரான் தலைநகராக மாறும் பிரிட்டன்; கரோனா அலைக்கான எச்சரிக்கையா?

பிரிட்டனில் வெள்ளிக்கிழமை மட்டும் கிட்டத்தட்ட 25,000 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிரிட்டனில் ஒமைக்ரான் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை சனிக்கிழமையும் உயர்ந்துள்ளது. பிரிட்டனில் வெள்ளிக்கிழமை மட்டும் கிட்டத்தட்ட 25,000 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. வியாழக்கிழமையை ஒப்பிடுகையில், 10,000 பாதிப்புகள் அதிகமாக பதிவாகியுள்ளதாக பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு முகமை தெரிவித்துள்ளது.

ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக நம்பப்படும் ஏழு பேர் வியாழக்கிழமையன்று உயிரிழந்தனர். செவ்வாய்கிழமையை ஒப்பிடுகையில் ஒரு உயிரிழப்பு அதிகமாக பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது. ஒமைக்ரான் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக நம்பப்பட்டு மருத்துவனையில் சேர்க்கப்பட்டோர் எண்ணிக்கை 65லிருந்து 85 ஆக உயர்ந்துள்ளது.

வரவிருக்கும் பெரிய பிரச்னையின் சமிக்ஞையாக இது இருக்கலாம் என அரசு ஆலோசகர்கள் எச்சரித்துள்ளனர். இந்த பெரிய சம்பவத்தை கையாள்வதற்கான அனைத்து உதவிகளையும் நகரில் உள்ள மருத்துவமனைகளுக்கு செய்ய வேண்டும் என லண்டன் மேயர் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவசரநிலைகளுக்கான அரசு விஞ்ஞான ஆலோசனை குழு, "ஒவ்வொரு நாளும் நூறாயிரக்கணக்கான மக்கள் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், புள்ளிவிவரங்களில் அவர்கள் கணக்கு எடுக்கப்படவில்லை என்பது கிட்டத்தட்ட உறுதியாக உள்ளது.

கரோனா விதிகளை மேலும் கடுமையாக்காமல், தற்போது பின்பற்றப்பட்டுவரும் முறையால் இங்கிலாந்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 3,000 மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர்" என தெரிவித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம், தடுப்பூசி திட்டம் வேகம் எடுக்காத சமயத்தில், பிரிட்டனில் ஒரு நாளைக்கு 4,000க்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், சமீபத்தில் பரவ தொடங்கிய கரோனாவை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து ஆளும் கன்சர்வேட்டிவ் கட்சியினரே அதிருப்தி தெரிவித்துள்ளனர். புதிய விதிகளை காரணம் காட்டி, பிரெக்ஸிட் அமைச்சர் டேவிட் ஃப்ரோஸ்ட் பதவி விலகியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com