ஜவுளி மீதான ஜிஎஸ்டியை உயர்த்துவதற்கு எதிர்ப்பு...முடிவை ஒத்திவைக்கும் மத்திய அரசு?

வரும் 2022ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் தேதி முதல், ஆடைகள், ஜவுளி, பாதணிகள் மீதான ஜிஎஸ்டி 5 லிருந்து 12 சதவிகிதமாக உயர்த்தப்படும் என மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில், ஜவுளி மீதான ஜிஎஸ்டியை உயர்த்தும் முடிவை ஒத்திவைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, ஜவுளி மீதான ஜிஎஸ்டியை உயர்த்துவதற்கு பல்வேறு மாநிலங்கள், நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

ஜவுளி பொருள்கள் மீது அதிக வரி விதிக்கும் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் என பல்வேறு மாநிலங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. குஜராத், மேற்குவங்கம், தில்லி, ராஜஸ்தான், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தன. 

வரும் 2022ஆம் ஆண்டு, ஜனவரி 1ஆம் தேதி முதல், ஆடைகள், ஜவுளி, பாதணிகள் மீதான ஜிஎஸ்டி 5 லிருந்து 12 சதவிகிதமாக உயர்த்தப்படும் என மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. நிதிநிலை அறிக்கைக்கு முன்பான ஆலோசனை கூட்டத்தின் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம், மாநில நிதியமைச்சர்கள் இந்த விவகாரத்தை எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து தில்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா கூறுகையில், "சாமானியர்களின் குரலை நசுக்க அரசு அனுமதிக்காது. ஜவுளி வியாபாரிகள் ஜிஎஸ்டி கட்டண உயர்வை எதிர்க்கின்றனர் அவர்களின் கோரிக்கைகள் நியாயமானவை. எனவே ஆம் ஆத்மி கட்சி அரசு அவற்றை முன்னெடுத்துச் செல்லும்" என்றார்.

ஜிஎஸ்டி கட்டண உயர்வை சாடிய மேற்குவங்க முன்னாள் நிதியமைச்சர் அமித் மித்ரா, "இது சுமார் ஒரு லட்சம் ஜவுளி யூனிட்கள் மூடப்படுவதற்கும், 15 லட்சம் வேலையிழப்புக்கும் வழிவகுக்கும்" என்றார். 

ஜவுளி மீது ஜிஎஸ்டியை உயர்த்துவதால் அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அதிக செலவு ஏற்படும் என்றும் ஏழை மக்களின் ஆடைகளின் விலை உயரும் என்றும் தொழில் நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. 

தேசிய தலைநகர் தில்லியில் இன்று நடைபெற்ற 46ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மாநில மற்றும் யூனியன் பிரதேச நிதியமைச்சர்கள், மூத்த ஆலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com